2002 நரோடா பாட்டியா கலவர வழக்கு: 3 பேருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை

0

2002 நரோடா பாட்டியா கலவர வழக்கு: 3 பேருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றம்நிரூபிக்கப்பட்ட மூன்று பேருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள உமேஷ் பர்வாத், பத்மேந்திரசிங் ராஜ்பூத் மற்றும் ராஜ்குமார் சவ்மல் ஆகியோர் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்கள்.

முன்னதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குஜராத் அமைச்சர் மாயா கோட்னானியை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை இவ்வழக்கில் குற்றமற்றவர் என்று குஜராத் உயர் நீதிமன்றம் விடுவித்தது.(பார்க்க செய்தி) இவர் முன்னதாக விசாரணை நீதிமன்றத்தால் இவ்வழக்கில் குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டு 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டவர். இவ்வழக்கு தொடர்பாக 11 சாட்சியங்கள் தங்கள் வாக்குமூலத்தில், கலவரம் நடைபெற்ற பகுதியில் மாயா கோட்னானியை தாங்கள் கண்டதாக தெரிவித்தனர்.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அகமதாபாத்தின் நரோடாபாட்டியா பகுதியில் நடைபெற்ற இந்த கலவரத்தில் மொத்தம் 97 பேர் கொலை செய்யப்பட்டனர். இது அச்சமயத்தில் குஜராத் முழுவதும் நடத்தப்பட்ட கலவரங்களில் ஒரு பகுதியே. இவ்வழக்கு குஜராத் காவல்துறையால் முதலில் விசாரிக்கப்பட்டு அதில் 47 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை நம்பகத் தன்மையற்றது என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் 2008 ஆம் ஆண்டு இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இவ்வழக்கின் போக்கு மாறியது.

Comments are closed.