2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்த நீதிபதி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம்

0

2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்த நீதிபதி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம்

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவைரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்த ஹைதராபாத் கூடுதல் மேற்றோபொலிடன் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி K. ரவீந்தர் ரெட்டி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இவர் இந்த வழக்கை விசாரித்து வருகையில், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் மாயமானது. (பார்க்க செய்தி). பின்னர் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பை வழங்கியதும் அவர் அவரது பணியை இராஜினாமா செய்தார்.  இவரது இந்த இராஜினாமா குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும் நீதிபதி ரவீந்தர் ரெட்டி அவரது தனிப்பட்ட காரணங்களுக்காத்தான் இராஜினாமா செய்கிறார் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.(பார்க்க செய்தி). இந்நிலையில் தற்போது நீதிபதி ரவீந்தர் ரெட்டியின் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனது இந்த முடிவு குறித்து நீதிபதி ரவீந்தர் ரெட்டி கருத்துத் தெரிவிக்கையில், “எனக்கு பாஜக வை மிகவும் பிடிக்கும், ஏனென்றால் அது குடும்ப ஆட்சி இல்லாத தேசப்பற்று மிக்க கட்சியாகும். தேசவிரோதிகளை கட்டுக்கள் வைக்கவும் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் உறுதி பூண்ட ஒரு கட்சி பாஜக.” என்று அவர் தெரிவித்துள்ளார். தான் தேர்தலில் பாஜக சார்பில் கரிம்நகர் தொகுதியில் உள்ள ஹுஸ்னாபாத், அல்லது ஹைதராபாத்தில் ஏதாவது ஒரு தொகுதி அல்லது மேடக்கில் போட்டியிட தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பண்டாரு தத்தாரையாவிடம் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கடந்த வாரம் அமித்ஷா வருகை தந்த போதுஅவரை ரவீந்தர் ரெட்டி சந்தித்ததாக தெரிகிறது.மேலும் தான் கட்சியில் இணைவது குறித்து அமித்ஷா விருப்பம் தெரிவித்ததாகவும் தன்னைப்போன்ற அறிவு ஜீவிகள் பாஜகவில் இணைவது கட்சியை வலுப்படுத்தும் எனவும் இது மேலும் பல அறிவுஜீவிகள் கட்சியில் இணைய வழிவகை செய்யும் என்றும் பாஜக தலைவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ரவீந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை செப்டெம்பர் 20 ஆம் தேதி கட்சியில் இணைய பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரை கட்சியில் இணைப்பது தொடர்பாக பாஜக தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. இவர் பாஜக வில் தன்னை இணைத்துக்கொள்ள முழுதும் தயாராகி வந்த நிலையில் பாஜக வின் பண்டாரு தத்தாறையா அலுவலகம் அவரை சிறிது நாட்களுக்கு காத்திருக்கும்படி கூறியுள்ளது. இது குறித்து பாஜக தரப்பு கருத்து தெரிவிக்கையில், ரவீந்தர் ரெட்டி பாஜகவில் சேருவது குறித்து மாநிலத் தலைவர் லக்ஷ்மன் உட்பட பலரின் ஒப்புதல் தேவையுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 

Comments are closed.