2014 ஏப்ரலில் இருந்து விளம்பரத்திற்காக 3755 கோடி ரூபாய் செலவழித்த பாஜக மோடி அரசு

0

ஆம் ஆத்மி கட்சி விளம்பரத்திற்காக 526 கோடி ரூபாய் செலவழித்தது என்று கூறி அதனை பாஜக விமர்சித்த நிலையில் கடந்த 2014 ஏப்ரல் மாதத்தில் இருந்து இவ்வருடம் அக்டோபர் வரை விளம்பரத்திற்காக 3755 கோடி ரூபாய்களை பாஜக அரசு செலவு செய்துள்ளதாக RTI தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த விளபரங்கள் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மற்றும் வெளி விளம்பரகளுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வர் என்பவரால் இந்த RTI பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த RTI க்கு கிடைத்த் பதிலின் படி, 1656 கோடி ருபாய் மின்னணு விளம்பரங்கள், வானொலி விளம்பரங்கள், திரைப்பட விளம்பரங்கள், தூர்தஷன், இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் தொலைகாட்சி விளம்பரங்களுக்கு என்று செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகங்களுக்கு 1698 கோடிகளுக்கும் மேலாக பாஜக அரசு செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுவரொட்டிகள், பாணர்கள், புத்தகங்கள், நாட்காட்டி மற்றும் ஃப்ளக்ஸ் போர்டு முதலியவற்றிற்கு என்று 399 கோடிகள் செலவிடப்பட்டுள்ளதாகும் RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்திற்காக செய்த செலவுகள் சில அமைச்சரவைக்கு ஒதுக்கீடு செய்த நிதியைக் காட்டிலும் கூடுதல் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது. மாசு தடுப்பு வாரியத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு ஒதுக்கீடு செய்த மொத்த தொகை வெறும் 56.8கோடி ரூபாய் தான் என்று கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு தன்வர் பதிவு செய்த RTI இல் மத்திய அரசு 2014 ஜூன் 1 ஆம் தேதி முதல் 2016 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மோடியின் புகைப்படமிட்டு செய்யப்பட்ட விளம்பரத்தின் மதிப்பு மட்டும் சுமார் 1100 கோடி என்று கூறப்படுகிறது. இதில் 2014 ஜூன் 1 முதல் மார்ச் 31 2015 வரை 448 கோடி ரூபாய்களும், 2015 ஏப்ரல் 1 முதல் 2016 மார்ச் 31 வரை 542 கோடிகளும், 2016 ஏப்ரல் 1 முதல் 2016 ஆகஸ்டு 31 வரை சுமார் 120 கோடிகளும் விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொலைகாட்சி, மற்றும் பிற மின்னணு ஊடகங்களுக்கு மட்டும் செலவு செய்யப்பட்டவை என்றும் அவை அச்சு மற்றும் பிற விளம்பர செலவுகளை உள்ளடக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 இல் கேட்கப்பட்ட RTI தகவல் ஒன்றில் செய்தித்தாள் மற்றும் வானொலியில் மோடி உரையாற்றும் மங்கி பாத் நிகழ்ச்சிக்கு என்று 8.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தங்கள் சாதனைகளை விளம்பரப்படுத்தும் கட்சிகளை விமர்சிக்கும் பாஜக விளம்பரத்தில் சாதனை படைத்திருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Comments are closed.