2016 ஃபலஸ்தீனின் மேற்குக்கரை குழந்தைகளுக்கு மிகவும் கொடூரமான ஆண்டு

0

கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு ஃபலஸ்தீனின் மேற்க்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலியப் படைகள் 32 குழந்தைகளை கொலை செய்துள்ளது. இதில் பல கொலைகள் இராணுவ சோதனையின் போதும் போராட்டங்களின் போதும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மனித உரிமை அமைப்பான Defence for Children International (DCI) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது.

“இஸ்ரேலிய படையினர் Shoot to Kill எனும் கொல்வதற்காக சுடும் கொள்கைகளுடன் ஃபலஸ்தீனிய பகுதிக்குள் செல்கின்றனர் என்றும் ஃபலஸ்தீனியர்களை கொல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் இதனை அவர்கள் முழு பாதுகாப்போடும் எவ்வித பின்விளைவுகளும் இன்றி செய்கின்றனர் என்று DCI இன் இயக்குனர் அயத் அபு எக்டைஷ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினாரால் கொல்லப்பட்ட 32 சிறுவர்களில் 19 பேர் 16 இருந்து 17 வயதிற்குள்ளானவர்கள். மீதம் உள்ள 13  சிறுவர்கள் 13 இல் இருந்து 15 வயதிற்குட்பட்டவகள் ஆவர்.

கடந்த 2015 இல் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் கொல்லப்பட்ட 18 வயதிற்கு கீழானவர்களின் எண்ணிக்கை 28 ஆகவும் இது 2014 இல் 13 ஆகவும் 2013 இல் இது 4 என்ற எண்ணிக்கையிலும் இருந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஃபலஸ்தீன சிறுவர்களை இஸ்ரேல் கொலை செய்வது அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. இத்தகைய கொலைகளில் விசாரணை நடத்தப்படுவது என்பது அரிதிலும் அரிதான ஒன்று. 2014 இல் மட்டும் நதீம் நுவாரா கொலைக்காக ஒரு இஸ்ரேலிய வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2014, மே 15 இல் ஃபலஸ்தீனிய சிறுவர்கள் நதீம் நுவாரா (17 வயது) மற்றும்  மஹ்மூத் அபு தாஹெர் (16 வயது) ஆகியோர் இஸ்ரேலிய சிறைக்கு எதிராக போராட்டம் நடந்த போராட்டத்தின் போது இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியானது. இதனையடுத்து அந்த வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதுவும் கூட தளர்த்தப்படலாம் என்று அந்த வீரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரையில் இஸ்ரேலிய கொடூரங்களுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு 15 வயதான ஃபாரிஸ் அல்-பயத் என்ற சிறுவன். ரமல்லாவில் உள்ள ஜலாசோன் அகதிகள் முகாமில் உள்ள இந்த சிறுவன் இஸ்ரேலிய படையால் ரப்பர் பூச்சு கொண்ட இரும்பு தோட்டாவால் தலையில் சுடப்பட்டு உயிரிழந்தான். இந்த சம்பவம் 14 வயது சிறுவனான அஹ்மத் சரகா என்பவரை இஸ்ரேலிய படைகள் கொலை செய்ததை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் நடைபெற்றுள்ளது. 67 நாட்கள் கோமா நிலையில் இருந்த ஃபாரிஸ் அல்-பயத் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

தற்போதுள்ள சிறுவகள் அவர்களின் பெற்றோர்களை விட ஃபலஸ்தீனின் நடப்பு சூழ்நிலைகள் குறித்து மிகவும் தெளிவான அறிவுடையவர்களாக உள்ளனர் என்றும் இதனால் தான் இஸ்ரேலிய இராணுவம் ஃபலஸ்தீனிய சிறுவர்களை குறிவைக்கின்றது என்றும் பயத்தின் உறவினர் அபு முஹம்மத் தெரிவித்துள்ளார். முன்னரும் இது போன்று கொலைகளும், சோதனைகளும், கைதுகளும் நடைபெற்றது. ஆனால் தற்போதுள்ள இன்டர்நெட் முதலிய தொழில்நுட்பங்களால் சிறுவர்கள் தங்களை சுற்றி நடப்பவைகளை நன்கு உணர்கின்றனர். இதனால் அவர்கள் இன்னும் அதிக தேசப்பற்றுள்ளவர்களாக மாறுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரப்பர் தோட்டாக்கள் எனப்படும் இந்த தோட்டாக்களின் பயன்பாட்டு விதிப்படி இவை 40 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து கூட்டங்களை கலைப்பதற்காக சுடப்பட வேண்டும். அதுவும் கால் பகுதிகளில் மட்டுமே. சிறுவர்கள் மீது இவை பயன்படுத்தப்படக் கூடாது என்பதாகும்.

2015 அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேலிய படைகளும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களும் ஏறத்தாழ 244 ஃபலஸ்தீனியர்களின் கொலைக்கு காரணமாகியுள்ளனர். இந்த 244 பேர்களில் ஆயுதம் ஏந்தாத போராட்டக்காரர்கள், போராட்டங்களை வேடிக்கை பார்த்தவர்கள், எவ்வித ஆதாரங்களும் இன்றி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டவர்களும் அடக்கம். இந்த காலகட்டங்களில் 36  இஸ்ரேலிகளும் ஃபலஸ்தீனியர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இத்தகைய கொலைகள் குறித்து மேற்குக்கரை மனித உரிமை ஆர்வலர் ஹசெம் அபு ஹெலால் கூறுகையில், “இது இஸ்ரேலின் கொள்கைகளுள் ஒரு பகுதி” என்று கூறியுள்ளார். “இஸ்ரேலிய தேசத்தின் இனவெறிக் கலாச்சாரம் தான் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு ஃபலஸ்தீனியர்களை கொலை செய்வது சரி என்று போதிக்கிறது. ஏனென்றால் அவர்களது பார்வையில் அது ஆண், பெண் , குழந்தை என்றாலும் கூட ஒரு தீவிரவாதியை கொல்கிறோம் என்பது தான்.” என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய  ஜனநாயக நிறுவனம் என்ற அமைப்பு இஸ்ரேலில் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் 47  சதவிகித யூதர்கள், கைது செய்யப்பட்ட ஃபலஸ்தீனியர்களை அவர்களால் அச்சுறுத்தல் இல்லை என்ற போதும் கொலை செய்வது சரிதான் என்று கூறியுள்ளனர்.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு உட்பட பல மனித உரிமை அமைப்புகள், கடந்த 2015 அக்டோபர் மாதத்தில் இருந்து மொத்தம் 150 வழக்குகளில், இஸ்ரேலிய அதிகாரிகள் ஃபலஸ்தீனியர்களை அவர்காளால் எந்த அச்சுறுத்தல் இல்லை என்ற போதும் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட வீரர்களை நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றாலும் அவர்களுக்கு எதுவும் நேரப்போவது இல்லை. வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் கொலை செய்யபப்டுகிரார்கள், ஆனால் ஒரு இஸ்ரேலிய வீரன் கூட தண்டிக்கப்படவில்லை என்று அபு முஹம்மத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.