2016 உலகளவில் 122 பத்திரிகையாளர்கள் கொலை: 5  பேர் இந்தியர்கள்

0

கடந்த 2016 ஆம் ஆண்டு உலகளவில் 122 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 93 குறிவைத்து தாக்கப்பட்ட (Targetted Killings) நிகழ்வுகளில் கொல்லப்பட்டவர்கள். மற்றவை இயற்கை பேரழிவுகள் மற்றும் விபத்துகளில் தங்களது உயிரை இழந்தவர்கள். இந்த பத்திரிகையாளர்களில் 5 பேர் இந்தியர்கள். அதிகளவிலான பத்திரிகையாளர்கள் உயிரிழப்பை கொண்டு ஈராக் முதல் இடத்திலும் இந்த பட்டியலில் இந்தியா 8 ஆம் இடத்திலும் உள்ளது.

பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்படுவது என்பது கொலை, குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச்சூடு, போன்ற நிகழ்வுகளில் கொல்லப்படுவது ஆகும். ஆப்ரிக்கா, ஆசியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பா கண்டங்களிலும், மத்திய கிழக்கு மற்றும் அராபிய பகுதிகளிலும் மொத்தம் 23 நாடுகளில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என்று சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்  International Federation of Journalists (IFJ) தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் இலக்காக்கப்பட்ட எண்ணிக்கை கடந்த 2015 இல் 112 ஆக இருந்தது என்றும் கடந்த ஆண்டு 93 ஆக குறைந்துள்ளது என்றும் IFJ கூறியுள்ளது. இதில் (15) கொலைகளை கொண்டு ஈராக் முதலிடத்திலும், 13 மற்றும் 11 கொலைகளை கொண்டு ஆஃப்கானிஸ்தான் மற்றும் மெக்ஸிகோ அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்று IFJ குறிப்பிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்த வரிசையில், ஏமன், குவாடெமாலா, சிரியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே, 8,6,6,5,5 ஆகிய கொலைகளை கொண்டு அந்த பட்டியல் வரிசையில் தொடர்கின்றன.

இந்தியாவில் ஜன சந்தேஷ் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் தருன் மிஷ்ரா 2016, பிப்ரவரி 14 ஆம் நாள் உயிரிழந்துள்ளார். தாசா டிவி யின் ஊடகவியலாளர் இந்திரா யாதவ் மே 16 உயிரிழந்துள்ளார். டைனிக் ஹிந்துஸ்தான் செய்தி நிறுவனத்தின் தலைவர் ராஜ்தியோ ரஞ்சன் மே 13 உயிரிழந்துள்ளார். ஜெய் ஹிந்த் செய்தி நிறுவனத்தின் தலைவர் கிஷோர் தேவ் ஆகஸ்ட் 22 இல் உயிரிழந்துள்ளார் மற்றும் டைனிக் பாஸ்கர் நிறுவனத்தின் தலைவர் தர்மேந்திரா சிங் நவம்பர் 12 உயிரிழந்துள்ளார் என்று IFJ வின் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 இல் இந்தியாவில் 6 இலக்கு கொலைகள் பதிவாகியுள்ளன. இதில் பிரபல செய்தி நிறுவனமான ஆஜ் தக் மற்றும் இந்தி தினசரியான டைனிக் ஜாக்ரன் ஆகிய நிறுவன செய்தியாளர்களும் அடக்கம்.

இதை தவிர்த்து 20 பிரேசில் நாட்டு பத்திரிகையாளர்கள் கொலோம்பியாவின் மெடெலின் நகரில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தனர். மூன்று ரஷ்ஷிய பத்திரிகையாளர்கள் மற்றுமொரு விமான விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த இலக்கு கொலைகள் கடந்த 2015 விட 2016 இல் குறைந்திருந்தாலும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை குறித்து ஊடகவியலாளர்கள் மெத்தனமாக இருப்பதை விட்டு தவிர்த்துக் கொள்ளுமாறு IFJ எச்சரித்துள்ளது.

ஏமன், பாகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளுடன் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கொலையில் எவ்வித மாற்றத்தையும் காண முடியவில்லை என்று IFJ தலைவர் பிலிப் லேறுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஏற்படும் குறைவை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் இந்த புள்ளிவிபரங்கள் மற்றும் தொடர்கதையாகிவரும் ஊடகவியலாளர் இலக்குகொலைகள் ஆகியவை ஊடக பாதுகாப்பு பிரச்சனை குறித்து எந்த ஒரு நம்பிக்கையையும் நமக்கு தரவில்லை” என்று கூறியுள்ளார்.

140 நாடுகளில் ஏறத்தாழ 6,00,000 ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் IFJ கடந்த 2015 வரை 2,297 பத்திரிகையாளர்கள் இலக்கு தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு, மற்றும் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Comments are closed.