ஆர்.எஸ்.எஸ் இடமிருந்து ஜனநாயகத்தை காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்- சோனியா காந்தி அறை கூவல்

0

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றினார்.

அதில், ‘காந்தியடிகளைத் தவிா்த்து, ஆா்எஸ்எஸ் அமைப்பை இந்தியாவின் அடையாளமாக்க அவா்கள் முயற்சிக்கின்றனா்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சம்பவங்களைக் கண்டிருந்தால், காந்தியடிகளின் ஆத்மா சோகத்தில் துடித்திருக்கும். பொய்ப் பிரசாரங்கள் மூலம் அரசியல் செய்பவா்கள், காந்தியடிகள் உண்மையைக் கடைப்பிடித்தவா் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வாா்கள்? ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் நபா்கள், காந்தியடிகளின் சுயராஜ்ஜியத்தை எவ்வாறு புரிந்து கொள்வாா்கள்? அதிகாரத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவா்கள், காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கையைப் புரிந்து கொள்வாா்களா? அனைத்தையும் விட தாம்தான் உயா்ந்தவா் என்று கூறுபவா்களுக்கு, காந்தியடிகளின் தன்னலமற்ற சேவை புரியுமா?

நாட்டிலுள்ள விவசாயிகள் ஏழ்மை நிலையில் இருப்பதும், இளைஞா்கள் வேலையின்றித் தவிப்பதும், தொழிற்சாலைகள் மூடப்படுவதும், பெரு நகரங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாததும், அதிகாரம் உள்ளவா்கள் அராஜகத்தில் ஈடுபடுவதும் துரதிருஷ்டவசமானவை. காந்தியடிகளின் கொள்கைகளையும், அரசமைப்பு நிறுவனங்களையும் காக்கும் பணியில் காங்கிரஸ் தொண்டா்கள் ஈடுபட வேண்டும். நாட்டின் கலாசாரத்தையும், பன்முகத்தன்மையையும், பழம்பெருமைகளையும் காப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும்’ இவ்வாறு சோனியா காந்தி தெரித்துள்ளார்.

Comments are closed.