டெல்லி வன்முறை: பாதிக்கப்பட்டவர்களே வேட்டையாடப்படுகிறார்கள்!

0

வடகிழக்கு டெல்லியில் சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையே மத்திய அரசும், டெல்லி காவல்துறையும் வேட்டையாடுகின்றன. கலவரத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி 2600க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவல் அல்லது கைதுச் செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலோர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி கொல்லப்பட்ட 53 நபர்களில் 39 பேர் முஸ்லிம்களாவர். ஏறக்குறைய ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 19 பள்ளிவாசல்கள் மற்றும் 4 மதரசாக்கள் சேதமடைந்துள்ளன அல்லது அசுத்தப்படுத்தப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட பெரும்பான்மையான வீடுகள் மற்றும் கடைகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. ஷிவ் விகார் போன்ற இடங்களிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்னமும் தங்களது சேதமடைந்த வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை.

இவை அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் டெல்லி காவல்துறையின் செயலற்ற தன்மையால் மட்டுமல்ல, அவர்களால் துவக்கப்பட்டு அவர்களின் பங்களிப்புடனேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதனை நிரூபிக்கும் ஏராளமான வீடியோ காட்சிகளை கலவரம் நடந்த பகுதியில் உள்ள நபர்களே பதிவுச் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை பத்திரிகையாளர்களிடம் அவர்கள் காட்டியும் உள்ளனர். கொள்ளையடித்தவர்கள் மற்றும் கலவரக்காரர்களின் முகங்களை படம் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக காவலர்களே சி.சி.டி.வி. கேமராக்களை உடைப்பதை தெளிவாக காட்டும் ஏராளமான வீடியோ பதிவுகள் வெளியே வந்துள்ளன. கடுமையாக காயமுற்றவர்களை தேசிய கீதம் பாடுமாறு கட்டாயப்படுத்தும் காட்சிகளும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 22 முதல் 29 வரை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 21,000 அபயக்குரல் அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இவற்றில் 1,300 அழைப்புகள் கலவரம் தொடர்பானவை. இவை பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பெறப்பட்டுள்ளன. ஆனால், இந்த அழைப்புகளுக்கு உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை. காவல்துறை தனது கடமைகளில் மிகவும் அலட்சியமாக இருந்ததாக நாட்டின் உச்சநீதிமன்றம் கூட கருத்து தெரிவித்திருந்தது. காவல்துறை சட்டத்தின்படி செயலாற்றி பா.ஜ.க. தலைவர்களின் உணர்ச்சியை தூண்டும் பேச்சுக்களையும், மோசமான வன்முறைகளையும் தடுத்து நிறுத்தியிருந்தால் வன்முறை பரவுவதை தடுத்து பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக டெல்லி காவல்துறை அதன் அரசியல் எஜமானர்களையும், உள்ளூர் வகுப்புவாத குண்டர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் மெளனம் சாதித்தது. காவல்துறையினர் தங்களது கடமையை கைவிட்டு, சங்பரிவாருடன் கூட்டணி வைத்து செயல்பட்டதன் மூலம் வன்முறையை எளிதாக்கி, கட்டுக்கடங்காத கும்பலை தூண்டினர். சில சமயங்களில் அப்பாவி மற்றும் நிராதரவான முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள், கொலை, தீ வைத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றிற்கு உதவி செய்தனர்.

துணை ராணுவப்படைகளின் பல கம்பெனிகளை தவிர 87 ஆயிரத்திற்கும் அதிகமான வலுவான போலீஸ் படைகளை கொண்டுள்ள தேசிய தலைநகரில் அச்சு ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்களின் முன்னிலையில் 70 மணி நேரத்திற்கும் மேலாக இந்த வன்முறை நீடித்தது.

டெல்லி துணை நிலை ஆளுநரின் கீழ் காவல்துறை சிறப்பு ஆணையர் (விஜிலென்ஸ்) சுந்தரி நந்தா ஐ.பி.எஸ் தலைமையிலான பத்து பேர் அடங்கிய கமிட்டியின் அறிக்கையின்படி மொத்தம் 53 பேர் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 39 பேர் முஸ்லிம்களாவர். 11 பேர் இந்துக்கள். இரண்டு காவல்துறை அதிகாரிகளும், ஒரு அடையாளம் தெரியாத நபரும் கொல்லப்பட்டுள்ளனர். கொலை வழக்கு தொடர்பாக 9 காவல் நிலையங்களில் 46 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்) பதிவுச் செய்யப்பட்டுள்ளன. கராவல் நகர் காவல் நிலையத்தில் அதிகமான எஃப்.ஐ.ஆர்.கள் (13) பதிவுச் செய்யப்பட்டுள்ளன. கோகுல் பூரி காவல் நிலையத்தில் 11 எஃப்.ஐ.ஆர்.களும், தயால்பூர் காவல் நிலையத்தில் எட்டு எஃப்.ஐ.ஆர்.களும், ஜாஃபராபாத், பஜன்பூரா காவல் நிலையங்களில் நான்கு எஃப்.ஐ.ஆர்.களும், கஜூர் காஸ், ஜோதி நகர் காவல் நிலையங்களில் இரண்டு எஃப்.ஐ.ஆர்.களும், வெல்கம் காவல் நிலையம், நியூ உஸ்மான் காவல் நிலையம் ஆகியவற்றில் ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இது துணை நிலை ஆளுநர் அலுவலகம் நியமித்த கமிட்டி அளித்துள்ள அறிக்கையாகும்.

கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அன்றாடம் முஸ்லிம்களை டெல்லி போலீஸ் கைதுச் செய்து வருகிறது. காவல்துறையின் அட்டூழியங்களுக்கு எதிராக ஏற்பாடுச் செய்யப்பட்ட கண்டன பேரணிக்கு தகவல் தெரிவிக்க காவல் நிலையத்திற்கு சென்ற பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அஹ்மது மற்றும் மாநில செயலாளர் முஹம்மது இல்யாஸ் ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர். முன்னதாக பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர் தானிஷ் கான் கைதுச் செய்யப்பட்டார். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில அலுவலக செயலாளர் முகீத்தும் கைதுச் செய்யப்பட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் உயர்நீதிமன்றத்தை அணுகியது. டெல்லி காவல்துறையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததோடு கைதுச் செய்யப்பட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கியது.

(சித்தீக் காப்பன்)

தமிழில்: செய்யது அலி.

Comments are closed.