3 தொலைக்காட்சி சானல்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா NBSA வின் புகார்

0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக இந்தியா டுடே, ஆஜ் தக் மற்றும் டைம்ஸ் நவ் தொலைகாட்சிகள் மீது நீதிபதி R.V.ரவீந்தரன் தலைமை தாங்கும் தகவல் ஒளிபரப்பு தர அதிகாரத்திடம் (NBSA) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் அளித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில், இந்தியா டுடே, ஆஜ்தக் மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகள் போலியான குற்றச்சாட்டுகளையும், முழுப் பொய்களையும், தரக்குறைவான செய்திகளையும் பல உள்நோக்கத்துடன் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக வெளியிட்டு வந்துள்ளது என்றும் தங்கள் இயக்கத்தை பொதுமக்கள் முன்னிலையில் மோசமாக சித்தரிக்க அவர்கள் முயற்சித்தனர் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

செய்தி ஒளிபரப்பு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து NBSA தெளிவு படுத்தியுள்ளது. அதில் எந்த ஒரு தொலைக்காட்சியும் வேண்டுமென்றே போலியான மற்றும் அவதூறான செய்திகளை பரப்பக் கூடாது என்பதாகும். மேலும் குற்றச்சாட்டுகளை உண்மை போல சித்தரிக்க கூடாது என்றும் குற்றச்சாட்டுகளை குற்றங்கள் செய்தது போன்று செய்தி வெளியிடக்கூடாது என்றும் செய்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விஷயத்தில் இதில் எந்த நெறிகளும் கடை பிடிக்கப்படவில்லை என்று NBAC இடம் அவ்வியக்கம் குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் மீது வைக்கப்படும் (ஆதாரமற்ற) குற்றச்சாட்டுகளுக்கு ஊடக விசாரணை நடத்தி அவர்களே தீர்ப்பும் கொடுத்துவிட்டனர். இது நியாமற்ற அறநெறியற்ற இயற்கை நீதிக்கு புறம்பானது என்றும் அவ்வியக்கம் தெரிவித்துள்ளது. நடுநிலைமை பேணுவதற்கு பதிலாக இந்த தொலைக்காட்சிகள் குறிப்பிட்ட சிலரின் விருப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தனர் என்றும் இந்த தொலைக்காட்சிகளின் அரசியல் பழிதீர்க்கும் செயல்களினால் தங்கள் அமைப்பின் கண்ணியம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இவர்கள் பொதுமக்களிடையே மதவாத வெறுப்புணர்வை ஏற்படுத்த விரும்பியது அவர்களின் செயல்களில் இருந்து தெளிவாகவே தெரிகிறது என்றும் அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.

இந்த புகார்களை அளிக்கும் முன்னர், அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் முஹம்மத் அலி ஜின்னா இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த மூன்று தொலைகாட்சி நிறுவனங்களும் அவர்கள் வெளியிட்ட அந்த செய்திக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தங்களின் போலியான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டுமென்றும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

இதற்கு அவர்கள் பதிலளிக்காத காரணத்தால் NBAC இல் அவர் புகார் அளித்துள்ளார். மேலும் “ஊடகத்தின் நெறியற்ற, தரக்குறைவான போலியான பிரச்சாரங்களுக்கு எதிரான எங்களது சட்டப் போராட்டம் தொடரும். எந்த ஒரு ஜனநாயகமும் இது போன்ற தவறான மக்கள் அபிப்ரியாயத்தை ஏற்படுத்தும் ஊடக விசாரணையை அனுமதிப்பது இல்லை. இயற்க்கை நீதியை தவிர்த்து அவர்கள் தங்களை தாங்களே நீதிபதிகளாக நினைத்துக் கொள்கின்றனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.