300 க்கும் மேற்பட்ட வழக்குகளில் காவல்துறையின் போலி சாட்சியாக நடித்த இளைஞர்

0

சத்தீஸ்கர் மாநிலத்த்தின் பஸ்தர் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய சோமேஷ் பனிகிரஹி. இவர் சுமார் 250 இல் இருந்து 300 வழக்குகளில் காவல்துறையின் சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புதிய ஒரு சாதனையே புரிந்துள்ளார்.இதனால் இவரை காவல்துறையின் கையிருப்பு சாட்சி என்று கிண்டலாக அழைக்கின்றனர்.

காவல்துறை தங்களது வழக்குகளுக்கு போதிய சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றால் இவருக்கு வழக்கு குறித்த போதிய தகவல்களை கூறி நீதிமன்றத்தில் என்ன கூறவேண்டும் என்பதையும் கற்பித்து அதை அப்படியே நீதிமன்றத்தில் ஒப்பிக்கச் செய்வர். இவரின் இந்த செயல் பல நேரங்களில் நீதிபதிகளின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளது. மேலும் இதனால் பல குற்றவாளிகளிடம் இருந்து இவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சோமேஷ் கூறுகையில், “ஒவ்வொரு மாஜிஸ்திரேட், வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினருக்கு என்னை குறித்து தெரியும். நான் நீதிமன்றங்களுக்கு வழக்கமாகச் செல்பவன். ஒரு முறை ஒரு மாஜிஸ்திரேட் என்னை சிறையில் தள்ளிவிடுவதாக கூட எச்சரித்தார். தற்போது நான் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் இடையில் மாட்டிக்கொண்டுள்ளேன்.” என்பர் கூறியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இவர் சூதாட்டம், கஞ்சா பறிமுதல், கொலை வழக்கு முதல் மாவோயிஸ்ட் வன்முறை வழக்குகள் வரை அனைத்திலும் காவல்துறையின் சாட்சியாக ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

தனது 2 ஆம் வகுப்பை முடித்த சோமேஷ் தனது குடும்பத்தின் வருமானத்திற்கு உதவும் வகையில் அப்பகுதி வட்டார தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் தான் அவர் முதன் முதலில் காவல்துறையினருக்கு போலி சாட்சியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “2013  ஆம் ஆண்டு கோட்வாலி காவல் நிலையத்திற்கு நான் என்னுடைய மூத்த அதிகாரியின் உத்தரவின் பேரில் சென்றிருந்தேன். அங்கு சில சூதாட்டக் காரர்கள் குறித்த காவல்துறையின் அறிக்கையை பதிவு செய்ய நான் அனுப்பப்பட்டேன். அப்போது அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் குறிப்பிட்ட அந்த வழக்கில் அவர்களுக்கு எந்த ஒரு சாட்சியும் இல்லாத காரணத்தினால் என்னை சாட்சியாக நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு நான் சம்மதிக்கவே அதன் பிறகு பல வழக்குகளில் என்னை அவர்கள் சாட்சியாக்கிக் கொண்டனர்.” என்று கூறியுள்ளார். பின்னர் இதனை தொடர்ந்து பிற காவல்துறையினரும் தன்னை அவர்களின் சாட்சியாக மாற்றிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் இந்த சட்ட விரோத செயலுக்கு சோமேஷ் ஏன் சம்மமதம் தெரிவித்தார் என்ற கேள்விக்கு அரசு பணியின் மேல் சோமேசிற்கு இருந்த ஆசையும் அது கிடைக்க காவல்துறையினர் தனக்கு உதவுவார்கள் என்ற சோமேஷின் எண்ணமும் தான் என்று அவரின் தந்தை சுஷில் பனிகிரஹி தெரிவித்துள்ளார். பட்டதாரியான சோமேஷ் சுமார் முன்னூறு வழகுகளில் காவல்துறையின் சாட்சியாக நடித்த போதும் இன்னும் அவர் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தான் சாட்சியாக ஆஜரான வழக்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கு கூட தனக்கு தெரியாது என்று கூறும் சோமேஷ், தனக்கு கிடைக்கும் நீதிமன்ற நோட்டீஸின் அடிப்படையில் பார்த்தால் அது 250 இல் இருந்து 300 வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது இந்த செயல் குறித்து தன் மனசாட்சி அவ்வபோது உறுத்தும் என்றும் தான் நீதிமன்றங்களில் பொய் கூறியிருக்கக் கூடாது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பலமுறை தான் காவல்துறையிடம், இனி தன்னை காவல்துறை சாட்சியாக நடிக்க கேட்க வேண்டாம் என்று கூறிய போதும் அவர்கள் அதனை கண்டுகொள்வதாக இல்லை என்று சோமேஷ் கூறியுள்ளார். “2015 இல் நான் காவலர்களிடம் இனிமேல் என்னை அவர்களின் சாட்சியாக குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. நான் மாவோயிஸ்ட் வழக்குகளிலும் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளேன் என்றும் அவர்கள் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டல் அழைப்புக்கள் விடுக்கின்றனர் என்றும் கூறினேன். ஆனால் காவல் துறையினரோ என்னை கவலைப்பட வேண்டாம் என்றும் நிலைமை மோசமடைந்தால் தங்களிடம் கூறுமாறும் தெரிவித்தார்கள்.” என்று கூறியுள்ளார்.

தற்போது சோமேஷ் தனக்கும் தனது குடும்பத்திற்கும் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நான் அவர்களுக்கு உதவியுள்ளேன். அவர்கள் என்னை பாதுகாக்க வேண்டும். எனக்கு ஒரு வாரத்திற்கு பல நீதிமன்ற நோட்டீஸ்கள் வருகின்றன. ஒவ்வொரு வழக்கிற்கும் நான் ஐந்தில் இருந்து ஆறு முறை நீதிமன்றம் செல்கின்றேன். ஒவ்வொரு முறை நான் நீதிமன்றம் செல்லும் போதும் நான் எனது கடையை அடைக்க வேண்டியுள்ளது. நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம். எங்களுக்கு இது மிகச் சிரமமாக உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜக்தல்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆரிஃப் ஷேக், சோமேஷ் சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகளின் விபரங்கள் தொடர்பாக அப்பகுதி காவல் நிலையங்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் அவருக்கு பாதுகாப்பு தர தயாராக உள்ளோம். மேலும் இந்த வழக்குகளில் அவர் அவருக்கு தெரியாமலேயே கட்டாயப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டாரா என்றும் நான் விசாரித்து வருகின்றேன். அப்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால் அந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

சோமேஷின் நிலை குறித்து கருத்து தெரிவித்த சத்திஷ்கர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சதீஷ் வெர்மா, “இது காவல்துறை அப்பாவி மக்களை போலியான குற்றச்சாட்டுகளை கூறி கைது செய்து வருவதை குறிக்கிறது.” என்று கூறியுள்ளார்.

Comments are closed.