38 நாட்கள்: நஜீப் அஹமத் குறித்து எந்த தகவலும் இல்லை – குடும்பத்தினர் போராட்டம்

0

ஜவஹர்கால் நேரு பல்கலைகழக மாணவர் நஜீப் அஹமத் ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவ பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு காணாமல் போனார். இன்று வரை அவர் குறித்த எந்த ஒரு தகவலும் இன்றி அவரது குடும்பம் தவித்து வருகிறது.

நஜீபை கண்டுபிடித்து தரக்கோரி JNU வளாகம் உள்ளேயும் வெளியேயும் போராட்டங்கள் பல நடந்து வருகின்றன. கடந்த புதன் கிழமை JNU மாணவர்கள் 50 பேர் நடத்திய போராட்டத்தில் நஜீபின் தாயார் மற்றும் சகோதரி பங்கெடுத்தனர்.

நஜீபை பிரிந்து வாடும் அவரது தாய், தன் மகன் எங்கோ அடைத்து வைக்கப்பட்டுள்ளான் என்றும் தான் ஒரு நோயாளியாக இருந்தாலும் கூட நஜீபிர்காக போராடி அந்த போராட்டத்தில் மரணிக்கவும் தயார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் ஒரு சர்க்கரை நோயாளி. கடந்த ஒரு மாத காலமாக நான் வீதியில் இறங்கி போராடி வருகிறேன். நான் தட்டாத கதவுகள் இல்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை இனியும் அதை செய்வேன்” என்று கூறியுள்ளார்.

நஜீபின் சகோதரி, “காவல்துறையினரான நீங்கள் நஜீபை தர்பங்கா பகுதியில் கண்டதாக கூறியுள்ளீர்கள், ஆனால் உங்களால் இன்னும் நஜீபை கண்டுபிடிக்க முடியவில்லை. நஜீப் காணாமல் போய் 30 நாட்களுக்கும் மேலாக ஆகிறது. ஆனால் இன்னும் அவனை குறித்து சிறு தடயம் கூட இல்லை. இது குறித்து அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை, அது பணப் பிரச்சனையில் மூழ்கியுள்ளது. அரசின் இந்த முயற்சியே அவர்களின் பல தோல்விகளை மறைப்பதற்காகத்தான்” என்று அவர் கூறியுள்ளார்.

நஜீபை கண்டுபிடித்து தர வேண்டி நடத்தப்படும் போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவ அமைப்பின் முன்னாள் தலைவர் கன்ஹையா குமாரும் இணைந்துள்ளார். அந்த போராட்டத்தில் நஜீபிற்கு நீதி வேண்டி கோஷம் எழுப்பிய அவர், “நஜீப் காணமால் போனது குறித்து கொடுக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்ட ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது JNU நிர்வாகத்தின் தோல்வி” என்று கூறியுள்ளார். மேலும், “எங்களது நண்பன், JNU வின் ஒரு மாணவன் காணாமல் போயுள்ளான் ஆனால் இந்த அமைப்பால் ஒரு மாத காலமாகியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

நஜீப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான JNU விசாரணையில் ஏ.பி.வி.பி அமைப்பினர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.