4 கோடி செலவில் நூலகங்களுக்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்த புத்தகங்களை வாங்கும் மகாராஷ்டிர அரசு

0

ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான தீனதயாள் உபாத்யாயின் கொள்கைகளை பரப்பும் பொருட்டு மகாராஷ்டிர மாநில அரசு நான்கு கோடி ரூபாய் செலவில் அவருடைய புத்தகத்தின் 15 தொகுப்புகளை சுமார் 10000 பிரதிகள் வாங்கியுள்ளது. இந்த பிரதிகள் மாநிலம் முழுவதிலும் உள்ள 12000 நூலகங்களுக்கு எந்த வித கட்டணங்களும் இல்லாமல் அனுப்பி வைக்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1940 இல் இருந்து 1968 வரையிலான காலகட்டத்தில் உபாத்யாய் பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக இருந்தார். அந்த காலகட்டத்திலான உபாத்யாயின் உரைகள், கடிதங்கள், மற்றும் இன்ன பிற ஆக்கங்கள் பல்வேறு இடங்களில் இருந்து தொகுக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொகுப்பு மகேஷ் சந்திர ஷர்மாவால் சரிபார்க்கப்பட்டு பிரபாத் வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக மகாத்மா காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் எழுத்துக்கள் மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்டாலும் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரின் கொள்கைகளை மாநில அரசு வெளியிடுவது இதுவே முதன் முறை.

மாநில அரசின் இந்த முடிவை கூடுதல் தலைமை செயலர் சீதாராம் குந்தே மற்றும் தொழிநுட்ப கல்வித்துறை உறுதி செய்துள்ளது. மேலும் அரசின் இந்த முடிவு உபாத்யாயின் நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி அரசு எடுத்த முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குந்தே கூறுகையில், “மாநில அரசு உபாத்யாயின் எழுத்துக்களை 10000 பிரதிகள் வாங்கி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற நூலகங்களுக்கு விலையில்லாமல் அனுப்ப இருக்கின்றது” என்று கூறியுள்ளார். இத்துடன் சயாஜிராவ் கேக்வாத், பரோடா மகாராஜா ஆகியோரின் எழுத்துக்களையும் மாநில அரசு இது போன்று விரைவில் வெளியிடும் என்று குந்தே கூறியுள்ளார்.

இந்த புத்தகங்கள் அதன் விற்பனை விலையை விட 30% குறைவான விலைக்கு பிரபாத் வெளியீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் மகாராஷ்டிர மாநில அரசின் இரு அவைகளிலும் உபாத்யாயின் ஆக்கங்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. மேலும் உபாத்யாயின் பெயரில் பழங்குடியின நல திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் ஆளும் பாஜக அரசு, பாட புத்த்தகங்களில் தங்களின் கருத்தை திணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அது புதிதாக மாற்றியமைத்த வரலாற்றுப் பாட புத்தகங்களில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் பெயர்களை அவசரகால நிலை மற்றும் போபோர்ஸ் ஊழல் குறித்த பகுதியில் சேர்த்து சர்ச்சையை கிளப்பியது. மேலும் ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாட புத்தகத்தில் உள்ள முகலாயர்கள் குறித்த பாடங்களின் பெரும் பகுதியை மகாராஷ்டிர அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.