40 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் எடியூரப்பா விடுதலை

0

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான பா.ஜ.க. வைச் சேர்ந்த எடியூரப்பாவையும் அவரது குடும்பத்தினரையும் 40 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

JSW Steel நிறுவனத்திற்கு பெல்லாரி மாவட்டத்தில் சுரங்கம் தோண்டுவதற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் எடியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் மற்றும் ஸ்டீல் நிறுவனம் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட மோசடி, ஏமாற்று, ஊழல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.

2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எடியூரப்பா மற்றும் 12 பேர் மீது ஊழல் குற்றம் சுமத்தியிருந்தது. மேலும் எடியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகன் வங்கிக் கணக்குகளில் 20 கோடி ரூபாய் தொகை 2010 ஆகஸ்ட் இல் இருந்து செப்டம்படர் மாதத்திற்குள் போடப்பட்டதாகவும் மேலும் ஒரு 20 கோடி ரூபாய் எடியூரப்பாவின் மகன்கள் நடத்தும் ட்ரஸ்ட்டிற்கு நன்கொடையாக JSW STEEL நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எடியூரப்பா 2011 ஜூலை 11 ஆம் தேதி தனது முதல்வர் பதவில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள எடியூரப்பா “வாய்மையே வெல்லும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Comments are closed.