4343.26 கோடிகளை விளம்பரத்திற்காக செலவிட்ட மோடி அரசு

0

4343.26 கோடிகளை விளம்பரத்திற்காக செலவிட்ட மோடி அரசு

தமது திட்டங்கள் எத்தனை சிறியதானாலும் சரி, அதற்கான விளம்பரங்கள் பிரம்மாண்டமானதாக இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டவர் மோடி. தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்றின்படி இதுவரை மோடி அரசு விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 4343.26 கோடி ரூபாய்களை செலவிட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த தொகையில் சுமார் பத்து லட்சம் குழந்தைகளுக்கு மூன்றாண்டு காலம் சிறந்த உணவளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, 2014 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், மோடி அரசு, 424.85 கோடிகளை அச்சு ஊடக விளம்பரங்களிலும், 448.97 கோடி ரூபாய்களை மின்னணு ஊடக விளம்பரங்களிலும் 79.72 கோடி ரூபாய்களை இதர விளம்பரங்களுக்காகவும் செலவிட்டுள்ளது. இது போல 2015 முதல் 2016 வரை 1171.11 கோடி ரூபாய்களும், 2016 முதல் 2017 வரை 1263.15 கோடி ரூபாய்களையும் வெறும் விளம்பரங்களுக்காக பாஜக செலவிட்டுள்ளது.

இந்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெற்ற திரு. கால்கியா, மோடியின் விளம்பரச் செலவுகள் அதிகமாக இருந்த போதிலும் 2017 ஆண்டில் அது குறைந்திருப்பது மோடியின் விளம்பரச் செலவுகள் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “நமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து எதிர் கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த செலவுகள் குறித்து தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் விமர்சனங்களால் 2017-2018 ஆண்டுக்கான மோடியின் விளம்பரச் செலவுகள் குறைந்துள்ளது. 2016-2017 இல் 1263.15 கோடிகளை விளம்பரங்களுக்காக செலவு செய்த மோடி அரசு 2017-2018 இல் 955.46 கோடிகளை செலவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 25% குறைவாகும்.” என்று கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்ற காரணத்தால் இனி வரும் காலங்களில் மோடி அரசின் இந்த விளம்பரச் செலவுகள் உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.