50 கோடி டாலர்களை வைத்து வெறும் 6 வீடுகளை கட்டிய செஞ்சிலுவைச்சங்கம்

0

2011 நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஹைதியில் வீடிழந்த மக்களுக்கு வீடுகளை கட்டித்தரும் திட்டத்தை முன்னிறுத்தி செஞ்சிலுவைச்சங்கம் நன்கொடை வசூலித்தது. LAMIKA  என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நூற்றுகணக்கான வீடுகளை கட்டித்தர இருப்பதாக செஞ்சிலுவைச்சங்கம் கூறியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் ஹைதி மக்களுக்காக தங்களது நன்கொடைகளை அள்ளிக்கொடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 50 கோடி அமெரிக்க டாலர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் சேர்ந்ததாகத் தெரிகிறது.

ஆனால் தங்களது வாக்குறுதிகளுக்கு மாறாக அந்த நன்கொடைகளை வீணடித்து போலியான கதைகளை செஞ்சிலுவைச்சங்கம் பரப்பியுள்ளது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையே அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. இதுவரை 1,30,000 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்று செஞ்சிலுவைச்சங்கம் கூறியிருக்க நிஜத்திலோ அது வெறும் ஆறு வீடுகளைத்தான் கட்டிக் கொடுத்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து செஞ்சிலுவைச்சங்கம் உறுதியளித்த எந்த ஒரு திட்டமும் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.மற்றொரு விளம்பரத்தில் 4.5 மில்லியன் ஹைதி மக்களுக்கு தாங்கள் உதவியதாக அது கூறியுள்ளது. ஆனால் அதனை நிரூபிக்கும் எந்த ஒரு ஆதாரத்தியும் அது தெரிவிக்கவில்லை.

ஹைதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஹைதியின் பிரதமராக இருந்த ஜீன் மேக்ஸ் பெல்லிரிவி செஞ்சிலுவைச்சங்கத்தின் இந்த கூற்றுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். செஞ்சிலுவைச்சங்கம் தாங்கள் ஹைதியில் 4.5 மில்லியன் மக்களுக்கு உதவியதாக கூறும் நேரம் ஹைதியின் மொத்த மக்கள் தொகையே வெறும் 10 மில்லியன் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த செஞ்சிலுவைச்சங்கம் ஹைதி நிலநடுக்கத்தை பணம் சேகரிக்கும் அருமையான சந்தர்ப்பமாக கருதியது என்று அந்த மைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிச்சல் ஒபாமாவில் இருந்து பல முன்னணி அமெரிக்க விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் இந்த நன்கொடைக்காக குரல் கொடுத்தனர். இதில் பெற்ற பணத்தின் மூலம் தங்களுக்கு இருந்த 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதிப் பற்றாக்குறையை அந்த அமைப்பு தீர்த்துக்கொண்டது.

ஹைதி மக்களுக்கு என திரட்டிய நிதிகள் எங்கு சென்றது என்பது குறித்தும் எந்த தகவலையும் வழங்க மறுத்துள்ளது செஞ்சிலுவைச்சங்கம். நிவாரண உதவிகளை செய்வதற்கு ஹைதி மக்களை சார்ந்திராமல்  முற்றிலும் வெளிநாட்டவர்களை சார்ந்திருந்ததே இந்த அமைப்பின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் தாங்கள் செய்யவேண்டிய பணிகளை மற்ற குழுக்களுக்கு வழங்கியதில் அதிகப்படியான பணம் செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தங்களின் பணிகள் ஹைதியில் தோல்வியடைந்தது குறித்து செஞ்சிலுவைச்சங்கம், மற்ற தன்னார்வ உதவிக் குழுக்களைப் போலவே செஞ்சிலுவைச்சங்கமும் பல சவால்களை ஹைதியில் சந்தித்தது என்றும் அது, ஹைதி சுங்கத்தில் ஏற்பட்ட தாமதம், தகுதியான ஊழியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை, காலரா போன்ற வியாதி என்று பல தடங்கல்களை தாங்கள் சந்தித்ததாக கூறியுள்ளது.

ஹைதியில் செஞ்சிலுவைச்சங்கம் செய்த புனரமைப்பு பணிகளை பார்வையிட கோரிக்கைகள் எழுந்த போது செஞ்சிலுவைச்சங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஹைதியில் நடத்தப்பட்ட நேரடி கள ஆய்வில் செஞ்சிலுவைச்சங்கத்தின் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை என்று நிரூபணமாகியுள்ளது. வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி பணியமர்த்தியிருகும் அந்த அமைப்பு ஹைதியின் புனரமைப்பிற்காக குறிப்பிடும் வகையில் எதையும் செய்யவில்லை என்று அந்த அமைப்பின் ஊழியர்களே தெரிவித்துள்ளனர்.

இவ்வளவிற்கும் மேல் அமெரிக்கர்களின் விருப்பமான தொண்டு நிறுவனமாக செஞ்சிளுவைச்சங்கமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.