500 ரூபாய்க்கு மக்கள் தவிக்க 500 கோடியில் மகள் திருமணத்தை நடத்தும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்

0

கருப்புப்பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய பா.ஜ.க. அரசு செல்லாதது என்று அறிவித்த பிறகு தங்கள் அன்றாட தேவைகளுக்கு பணம் இல்லாமல் நாடு முழுவதிலும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பு வெளியான ஐந்து நாட்களில் மட்டுமே 16 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. அமைச்சரும் சுரங்க அதிபருமான காலி ஜனார்தன் ரெட்டி தனது மகளின் திருமணத்தை 500 கோடி ரூபாய் செலவில் வெகு விமர்ச்சையாக கொண்டாடியுள்ளார். இந்த திருமணத்திற்கான அழைப்பிதழில் தொடங்கி ஆடம்பரத்திற்கு எங்கும் குறை வைக்கவில்லை ஜனார்த்தன் ரெட்டி. மற்ற திருமண அழைப்பிதழ்களில் உள்ள எழுத்துக்களுக்கு பகரமாக உள்ளே ஒரு LCD திரை இருக்கிறது. அதில் ஜனார்தன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு வருபவர்களை சினிமாவில் வருவது போன்று வரவேற்கும் பாட்டு ஒன்று காண்பிக்கப்படுகிறது. இந்த அழைப்பிதழுக்கே பலர்ர ஆச்சர்யப்பட்ட நிலையில் திருமணத்தை படு விமர்சையாக நடத்த திட்டமிட்டுள்ளார் ரெட்டி.

தன்னை விஜயநகர அரசரான கிரிஷ்ணதேவராயரின் மறு பிறப்பு என்று  எண்ணிக்கொள்ளும் ரெட்டி தன் மகளின் திருமணத்திற்காக விஜயநகர சாம்ராஜ்யத்தை பெங்களூரு அரண்மனைத் திடலில் உருவாக்கியுள்ளார். நான்கு நாட்களாக நடக்க இருக்கும் இந்த திருமண விஷேஷம் நவம்பர் 12 ஆம் தேதி மருதாணி விழாவுடன் தொடங்கியதாகத் தெரிகிறது. இந்தத் திருமணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள அரண்மனைகள், கோவில்கள், அரண்மனைக் காவலாளிகளைப் போல உடையணிந்த சேவகர்கள் என்று ஆடம்பரத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

மணமகளின் திருமணப் புடவையின் விலை மட்டுமே 17 கோடி ரூபாய் என்றும், அத்துடன் திருமனப்பெண்ணான பிராமினி அணியும் ஆபரணங்களின் விலை 90 கோடி மதிப்பிலானவை என்று கூறப்படுகிறது. திருமணதிற்கு வந்தவர்களை மகிழ்விக்க ஷாருக் கான் பங்கெடுக்கும் நிகழ்ச்சியும், பிரபுதேவாவின் நடனமும் இன்னும் தெலுங்கு திரையுலகின் பிரபல நாயகிகளான ராகுல் பரீத் சிங், பிராமணி உள்ளிட்ட ஒரு திரையுலக பட்டாளமே பங்கெடுக்கவுள்ளது.

ஏறத்தாள 30000 விருந்தினர்கள் பங்கெடுக்கும் இந்த திருமணத்திற்கு என்று 1500 அறைகள் நட்சத்திர ஹோட்டல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை திருமண அரங்கிற்கு அழைத்து வர 2000 வாகனங்களும் இன்னும் முக்கியமான நபர்களை வரவேற்க 15 ஹெலிபாட்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆடம்பரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த சனாதன் ரெட்டி முன்னாள் பா.ஜ.க. அமைச்சராவார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோத சுரங்கம் தொண்டியதற்காக சி.பி.ஐ.வால் கைது செய்யப்பட்டவர். பின்னர் உச்ச நீதிமன்றத்தால் 2015 ஆம் ஆண்டு இவரது சுரங்கம் அமைந்திருக்கும் தனது சொந்த ஊரான பல்லாரி மற்றும் கடப்பா செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இவருக்கு பிணை வழங்கப்பட்டது. பின்னர் இதுவும் அவரது மகளின் திருமணத்தில் பங்கெடுப்பதற்காக நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து  21 ஆம் தேதி வரை தளர்த்தப்பட்டுள்ளது. இவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் இப்படி ஒரு திருமணத்தை நடத்த இவரிடம் எப்படி இவ்வளவு பணம் உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர் 40000 இல் இருந்து 50000கோடி ரூபாய் மதிப்பிலான கருப்புபணத்தை சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் நிம்மதியாக உறங்க முடியாது என்று நாட்டின் நிதியமைச்சரும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இன்று நாலாயிரம் ரூபாய்க்காக வங்கியின் வாசலில் நிற்கின்றனர் என்று பிரதமரும் கூறி வரும் இந்நிலையில் இப்படி ஒரு திருமணம் நடைபெறுவதும் அதில் பா.ஜ.க. வின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான நிதின் கட்காரி கலந்து கொண்டுள்ளார் என்பதும் மத்திய அரசின் கருப்புப்பணம் மீதான நடவடிக்கைகள் எத்தகையது என்பதற்கு சாட்சியாக அமைகிறது.

Comments are closed.