6 மாதங்களில் 430 என்கெளவுண்டர்கள்: மனித உரிமைகளை காற்றில் பறக்கவிடும் உத்திர பிரதேச அரசு

0

கடந்த ஆறு மாதங்களில் உத்திர பிரதேசத்தில் மொத்தம் 430 என்கெளவுண்டர் நடைபெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இது கடந்த 180 நாட்களில் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கு ஒரு என்கெளவுண்டர் ஆகும்.

இது குறித்து உத்திர பிரதேச முதல்வர் அறிவிக்கையில் மீரட்டில் மட்டும் 193 என்கெளவுண்டர் நட்டத்தப்பட்டுள்ளதாகவும் ஆக்ராவில் 84 என்றும் பேரேலியில் 60 என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த என்கெளவுண்டர்கள் அனைத்தும் யோகி அதித்யநாத்தை பொறுத்தவரை சிறந்த நிர்வாகமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், “இன்று மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். முன்னர் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அஞ்சினர். அதை நாங்கள் மாற்றியுள்ளோம். தற்போது காவல்துறை முன் நின்று வழிநடத்துகிறது. காவல்துறை வெற்றிகரமாக இயங்குகிறது. இந்த காலகட்டத்தில் மோசமான 430 கிரிமினல்கள் என்கெளவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் கொல்லப்பட்டும் மேலும் 1106 பேர் கைது செய்யப்பட்டு 69 குற்றவாளிகளின் சொத்துகள் கைப்பற்றப்பட்டும் உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த என்கெளவுண்டர்களில் 88 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் பணியில் உயிரிழந்துள்ளார். மேலும் என்கெளவுண்டர் செய்யும் காவல்துறை குழுவிற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பரிசுத்தொகை தருவதாக அரசே அறிவித்துள்ளது. இது போன்ற உடனடி ரொக்கப்பரிசுகளை தேசிய மனித உரிமை ஆணையம் கண்டித்துள்ளது. இது போன்ற பரிசுகள் கொடுப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட அதிகாரிகள் அந்த பரிசுகளுக்கு உரியவர்கள் தானா என்று சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

இது வரை இந்த என்கெளவுண்டர் நடவடிக்கைகளில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இத்தகைய நடவடிக்கைகளின் போது குற்றவாளிகளை கொல்வது தங்கள் நோக்கமல்ல என்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது தான் தங்களின் நோக்கம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், “யாரையும் கொலை செய்வதோ அல்லது காயப்படுத்துவதோ எங்கள் நோக்கமல்ல. அவர்களை கைது செய்ய தான் முயற்சிக்கின்றோம். ஆனால் குற்றவாளிகள் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால் நாங்கள் திருப்பித் தாக்க வேண்டியிருகின்றது.”  என்று கூறியுள்ளார். இவர் இது போன்ற பல என்கெளவுண்டர் சம்பவங்களை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய என்கெளவுண்டர்கள் மெதுவாக நகரும் குற்ற வழக்குகள் மற்றும் திறனற்ற நீதி அமைப்பை காவல்துறை பாணியில் எதிர்கொள்வது என்று கூறப்படுகிறது. ஆனால் இத்தகைய செயல்களுக்கு ரொக்கப்பரிசு அளிப்பது எந்தவித பின்விளைவுகளும் இன்றி கொலை செய்யலாம் என்ற தைரியத்தை  அதிகாரிகளுக்கு கொடுப்பதாகும்.

Comments are closed.