0

எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் வீரர் தேஜ் பகதூர் யாதவ் என்பவர் எல்லை பாதுகாப்பு படையில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மிக மோசமான வசதிகள் குறித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இவரது இந்த பதிவு வைரலானதுடன் எல்லைப்பாதுகப்பு படையினர் எவ்வாறு நடத்தபப்டுகின்றனர் என்ற கேள்வியையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.

தேஜ் பஹதூர் தனது ஒரு பதிவில் கையில் ஒரு கருகிப்போன ரொட்டியும், ஒரு தேநீரும் வைத்திருக்கும் நிலையில் இது தான் தங்களது காலை உணவு என்று கூறுகிறார். ரொட்டிக்கு கூடுதலாக ஊறுகாய் கூட இல்லை என்றும் அவர் அந்த வீடியோவில் கூறுகிறார். மற்றொரு கானொளியில், மோசமான சமையல் நிலையில், ஒரு பாத்திரத்தை காட்டும் அவர் அது பருப்பு என்றும் அதில் வெறும் மஞ்சள் மட்டும் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஜம்மு கஷ்மீரில் 29 வது பட்டாலியனில் பணியாற்றும் இவர் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எவ்வாறு இந்த உணவை உண்டு 10 மணிநேரம் பணியாற்ற இயலும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தங்களுக்கு தேவையான உணவுகள் அனைத்தும் இராணுவ கிடங்கிற்கு வருகின்றன என்றும் ஆனால் அதனை தங்களது உயரதிகாரிகள் கள்ளச் சந்தையில் விற்றுவிடுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவரது இந்த பதிவு இராணுவத்தில் நிலவும் ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த இராணுவ உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்ஹ்க்கர் ராஜ்நாத் சிங், உள்துறை செயலருக்கு இது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளாதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேஜ் பகதுரின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள எல்லை பாதுகாப்பு படையோ, வீரர்களின் நிலை குறித்து விளக்கமளிக்காமலும் அதனை மேம்படுத்த முயற்ச்சிகள் எடுக்காமலும் இந்த நிலையை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தேஜ் பகதூர் மீது குற்றங்களை அடுக்கியுள்ளது.

இவர் மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு முறை மது போதையில் இவர் தவறாக நடந்துகொண்டார் என்று கூறியுள்ளது. மேலும் இவருக்கு நான்கு முறை பெரிய தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

தனது வீடியோ பதிவு ஒன்றில் எல்லை பாதுகாப்பு படையினர் அனுபவித்து வரும் இந்த கஷ்டங்களை தான் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதினால் தனக்கு என்ன நேரும் என்று தெரியாது என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.