தங்கையால் கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் உறுப்பினர்: முஸ்லிம்கள் மீது பலி சுமத்திய பாஜக

0

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கார்த்திக் ராஜ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 2016  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த கொலைக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்றும் கொலையாளிகளை கண்டுபிடிக்க காங்கிரஸ் கட்சி எதுவும் செய்வதில்லை என்றும் பாஜக சார்பில் பரப்புரை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கார்த்திக் ராஜை கொலை செய்தது அவரது சொந்த சகோதரி என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக கார்த்திக்கை அவர் தனது நண்பர்களின் உதவியுடன் கொலை செய்துள்ளார் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில், கார்த்திக் ராஜை கொலை செய்வதற்கு அவரது சகோதரி, கவ்தம் என்பவருக்கு 5 லட்சம் பணம் கொடுத்ததாகவும் கவ்தம், அவரது சகோதர் ப்ரீதமின் உதவியுடன் கார்த்திக்கை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெற்ற இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கார்த்திக் மறுநாள் உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பான எந்த ஒரு தகவலும் இல்லாமல் காவல்துறை திணறிய போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வழக்கம் போல இந்த கொலையை அரசியல் கொலை என்றும் முஸ்லிம்கள் தான் அதனை செய்ததாகவும் பரப்புரையில் ஈடுபட்டனர். பாஜக வின் மூத்த தலைவர்கள் ஆத்திரமூட்டும் கருத்துக்களை பதிவு செய்து நிலைமையை இன்னும் மோசமடையச் செய்து அதன் மூலம் பதற்றத்தை உண்டு பண்ண பார்த்தார்கள். இந்த கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.நலின் குமார் கடில், அந்த மாவட்டத்தையே தீயிட்டுக் கொளுத்த பாஜகவால் முடியும் என்று கூறியிருந்தார். “நாங்கள் உங்களிடம் இன்று கூறுகிறோம், அடுத்த பத்து நாட்களில் கொலையாளிகளை பிடித்து மக்களை பாதுகாக்கவில்லையெனில் தக்ஷின கன்னடா மாவட்டத்தைய தீயிட்டு கொளுத்த எங்களால் முடியும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் அப்பகுதி காவல்துறையினர் அப்பகுதி அமைச்சர்களின் கூற்றுக்கிணங்க செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர்கள் விசாரணையை தாமதிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த கொலை கேரளாவை சேர்ந்த ஒரு தீவிரவாத குழுவால் நிகழ்த்தப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “கேரளாவில் இருந்து வரும் தீவிரவாதிகள் இது போன்ற குற்றச் செயல்களை செய்கின்றனர். இது எல்லையோரப் பகுதியாக இருப்பதினால் அவர்களுக்கு உள்ளே நுழைந்து இது போன்ற செயல்களை செய்வது எளிதாக உள்ளது. இப்பகுதி எம்.எல்.ஏ,க்கள் இங்கு நடக்கும் குற்றச் செயல்களுக்கு நேரடி பொறுப்பு” என்று கடில் கூறியுள்ளார்.

கார்த்திக்கின் கொலையை ஒட்டி கர்நாடக முன்னாள் முதல்வரும் கர்நாடக பாஜக தலைவருமான பி.எஸ்.எடியுரப்பா, கார்த்திக்கின் படுகொலை அவர் இந்துத்வா கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்த காரணத்தினால் ஜிஹாதிகளால் நடத்தப்பட்ட அரசியல் படுகொலை என்று கூறியிருந்தார். மேலும் கொலை செய்யப்பட்டவரின் வீட்டிக்கு சென்ற அவர் இந்த கொலைக்கு காங்கிரசும் ஒரு காரணம் என்று கூறியிருந்தார்.

கர்நாடக பாஜக பொதுச் செயலாளர் CT.ரவி, இந்த கொலைக்காக உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார். பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இந்த பிரச்சாரத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் செய்துவந்தது.

இந்நிலையில் இந்த கொலைக்கான உண்மை குற்றவாளி காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டது பாஜகவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கார்த்திக்கின் கொலை மூலம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று எண்ணிய அவர்களின் எண்ணம் காவல்துறையினரின் நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.