0

சபர்மதி எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு: 16 வருடங்கள் கழித்து நிரபராதி என விடுவிக்கப்பட்ட குல்சார் அஹமத்

2000 ஆம் ஆண்டு 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 16 வருடங்கள் சிறையில் இருந்த காஷ்மீரை சேர்ந்த குல்சார் அஹமத் வாணி என்பவரை உத்திர பிரதேசத்தின் பாரபங்கி மாவட்ட நீதிமன்றம் குற்றமற்றவர் என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் அராபிய துறையில் PHD ஆய்வு மாணவராக பயின்று வந்த இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்பட்டது. இவரை காவல்துறை 2001 ஜூலை மாதம்  31 ஆம் தேதி கைது செய்தது. அப்போது அவருக்கு 28 வயது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த குல்சார் அப்போதில் இருந்து சிறையில் இருந்தார். தற்போது வெளியான இந்த தீர்பிகுப் பிறகு அவர் சிறையில் இருந்து வெளிவர உள்ளார்.

இது குறித்து வாணியின் வழக்கறிஞர் பிரபாத் சிங் கூறுகையில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி M.A.கான், குல்சார் அஹமத் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் முபீன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்று கூறி அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது. .இதில் அப்துல் முபீன் 2008 ஆம் ஆண்டில் இருந்து பிணையில் உள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் எந்த ஒரு ஆதாரத்தையும் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார். இன்னும் வெறுமனே அவர்களை சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சித்தரித்ததன் மூலம் சபர்மதி எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கு இரண்டு குற்றம் சாட்ப்படுபவர்களை காவல்துறை உருவாக்கிக் கொண்டது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குல்சார் அஹமத் மீது 10 இற்கும் மேற்பட்ட வேறு பல குண்டுவெடிப்பு வழக்குகளும் 14 முதல் தகவல் அறிக்கைகளும் டில்லி, மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளிலும் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுளர்.

முன்னதாக ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 16  வருடங்களுக்கும் மேலாக குல்சார் வாணியை சிறையில் வைத்திருப்பது என்பது வெட்கக்கேடான செயல் என்று உச்ச நீதிமன்றம் சாடியிருந்தது. (பார்க்க செய்தி).

 

Comments are closed.