ஒருவரின் மதத்தை காரணம் காட்டி கொலையை நியாப்படுத்தாதீர்கள்: உச்ச நீதிமன்றம்

0

2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு புனேவில் சுமார் 23 பேர் கொண்ட மதவெறி கும்பலால் ஹாக்கி மட்டை, கட்டை மற்றும் கற்கள் கொண்டு மொஹ்சின் ஷேக் என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவர் அப்போது இரவுத் தொழுகை முடித்துவிட்டு அவரது நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

இவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு பிணை வழங்கி பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி மிருதுளா பட்கர் முன்னர் தீர்பளித்திருந்ததார். இவர் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத ரீதியில் தூண்டப்பட்ட காரணத்தினாலும் கொலை செய்யப்பட்டவர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தினாலும் தான் இந்த கொலை நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட மேல் முறையீட்டில் குற்றவாளிகளின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிணையை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதி S.A.போப்டே மற்றும் நீதிபதி L.நாகேஸ்வர ராவ், கொல்லப்பட்டவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது கொலைக்கு நியாயமாகாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய போது உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நீதிமன்றமானது, பல சமூகத்தின் உரிமைகள் குறித்து அணுகும் போது நாட்டின் பன்முகத்தனையை கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் நீதிபதிகள் தங்களது கருத்துக்களை எந்த ஒரு சமூகத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ தெரிவிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

2014 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ஹிந்து ராஷ்டிர சேனா என்கிற அமைப்பு புனேவின் ஹடஸ்பர் பகுதியில் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் அதன் தலைவர் தனன்ஜை தேசாய் இந்து இளைஞர்களை ஆத்திரமூட்டும் கருத்துக்களை பரப்பியுள்ளார். இதனையடுத்து இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகளுடன் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற மொஹ்சின் மற்றும் அவரது நண்பர் ரியாஸ் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரியாஸ் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். ஆனால் மொஹ்சின் ஷேக் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். மொஹ்சினின் கொலைக்கு பின்னர் வலதுசாரி இந்து அமைப்பினர் தங்களுக்கிடையே “முதல் விக்கட் விழுந்துவிட்டது” என்று குறுந்தகவல் அனுப்பி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.