9/11:பீதியின் நிழல் மாறாத உலகம்

0

 

நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை தகர்த்த 2001 செப்டம்பர் 11 அன்று அரங்கேறிய தாக்குதலுக்கு 14 ஆண்டுகள் நிறைவுறுகின்றன.அந்த துயரமான தினத்தை அமெரிக்க நகரங்கள் நினைவு கூறும் வேளையில் உலக நாடுகளில் பீதியும், கவலையும் இன்னும் மாறவில்லை.
9/11 தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக சிலுவைப்போரை பிரகடனப்படுத்திய ஜூனியர் புஷ்ஷின் தலைமையிலான அமெரிக்க அரசு, ஆப்கான், ஈராக் நாடுகளில் நடத்திய ஆக்கிரமிப்பு போரால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.இன்னமும் மேற்காசிய மோதல்களின் சேறுகளில் சிக்கி அமெரிக்கா மீளமுடியாமல் தவிப்பதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.உலகை பாதுகாப்புமிக்க வாசஸ்தலமாக மாற்றுவதற்காக புறப்பட்ட அமெரிக்க ஆட்சியாளர்களின் பிரகடனங்கள் வெற்றுக்கோஷங்களே என்பதை சிரியா, ஈராக் புவி பரப்புகளில் ஐ.எஸ் ஆயுதக்குழுவின் பெயரால் நடைபெறும் தாக்குதல்களும் அதற்கு பதிலடியாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பதில் தாக்குதல்களும், மக்களின் புலன்பெயர்வுகளும் நிரூபிக்கின்றன.
வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான திட்டங்களையெல்லாம் முடக்கிவிட்டு ஆக்கிரமிப்பு போர், சிறைக்கைதிகளுக்கான ரகசிய சித்திரவதை கூடங்கள், ட்ரோன் தாக்குதல்கள், ரகசிய கண்காணிப்பு திட்டங்கள் என பெருந்தொகையை செலவழித்த பிறகும் கடந்த 14 ஆண்டுகளில் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் எதை சாதித்தன? என்பது கேள்விக்குறியாகவே மிஞ்சுகிறது.அல்காயிதா, தாலிபானுக்கு எதிரான நடவடிக்கையின் பெயரால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழித்தை தவிர வேறு என்ன லாபம் இவர்களுக்கு கிடைத்தது? புதிதாக தோன்றியுள்ள ஐ.எஸ்ஸின் உருவாக்கமும், அதன் செயல்பாடுகளும் மர்மமாகவே உள்ளது.அமெரிக்கா, தானே உருவாக்கிய தீவிரவாத பீதியால் உள்நாட்டு பாதுகாப்பிற்கே பெருந்தொகையை ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.இத்தகையதொரு சூழலில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படும் திட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அதற்காக ஒதுக்கப்படும் பெருந்தொகையிலான நிதிக் குறித்து மீளாய்வு செய்து அவற்றை வளர்ச்சி திட்டங்களிலும், அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு போர்களால் பாதிக்கப்பட்ட தேசங்களுக்கும், அங்கு துயரங்களை அனுபவித்து வரும் மக்களின் மறுவாழ்வுக்கும் மடை மாற்றவேண்டும்.இதுதான் மனிதநேய சிந்தனையாளர்களின் அறிவுரையாகும்.ஆனால், ஆயுத விற்பனை, உலகளாவிய ஆதிக்கம், போர் வெறிப்பிடித்த வல்லரசுகள் இதுக்குறித்தெல்லாம் சிந்திக்குமா? என்பது கேள்விக்குறியே!

Comments are closed.