பெஹ்லுகான் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடிவு!

0

பெஹ்லுகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஏப்ரல் 1ஆம் தேதி பெஹ்லுகான் மற்றும் அவரது இரு மகன்கள் பசுக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஜெய்ப்பூருக்குச் சென்றுகொண்டிருந்தனர். பெஹ்ரார் என்னும் இடத்தில் அவர்களை வழிமறித்த பசு குண்டர்கள், மூவரையும் கடுமையாக தாக்கினர். இரண்டு நாள்களில் பெஹ்லுகான் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர் தாக்கப்படும் வீடியோ, நாடு முழுவதும் வைரலாகப் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரில் ஆறு பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மற்ற மூன்று பேரும் சிறார்களாக இருப்பதால், அவர்களை சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டது.

பெஹ்லுகானின் உடலை பிரேதத்தைப் பரிசோதனை செய்த தனியார் மருத்துவர்கள், `அவர் இதய நோய் காரணமாக இறந்தார்’ எனக் குறிப்பிட்டனர். ஆனால் அரசு மருத்துவர்கள் `காயம் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்தார்’ என்றார்கள்.

இதில் அரசு மருத்துவர்களின் சாட்சிகளை எடுத்துக்கொண்ட நீதிமன்றம், பெஹ்லுகான் கொலை வழக்கு முடிவுக்கு வந்ததாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்டவர்ளுக்கு தண்டனை வழங்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்ட்டது.

பின்னர் பெஹ்லுகானின் இரு மகன்களும் பசுவதைத்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் அறிவித்துள்ளார். வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.