ஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்

0

சபிதா பர்வீன்

BLACK LIVES MATTER எனும் பாதாகைகள் உலகினை அமெரிக்காவின் பக்கம் திருப்பியுள்ளது.

ஆனால் அங்கிருக்கும் சிறுபான்மை சமூகத்திற்கு தெரியும், அவர்கள் ஏதோ இன்று மட்டுமல்ல ஆண்டாண்டு காலங்களாக சுரண்டலுக்கு பழகி போனவர்கள் என்று! பொதுவிதிகளால் பிணைக்கப்பட்டவர்கள் என்று! ஒடுக்கப்பட்டவர்கள் என்று! குரலற்றவர்கள் என்று… அவர்களுக்கு தெரியும்.

ஜார்ஜ் ஃபிளாயிட் எனும் கறுப்பினத்தவரின் இறுதி வார்த்தைகளான I can’t breathe அமெரிக்கர்களை மூச்சடைக்க செய்திருக்கலாம். அது ஒன்று மட்டுமே அவர்களை வீதிக்கு அழைத்து வந்துள்ளது.

இந்த மாதிரியான கிளர்ச்சிதான் உண்மையிலையே கண்ணாடிகளை மட்டுமல்லாமல் போலி பிம்பங்களையும் சல்லி சல்லியாக உடைக்கின்றன.

அமெரிக்கா எனும் டாலர் தேசம் இருமைகளால் கட்டமைக்கப்பட்டது. மாட மாளிகைகளுடன் உச்சபட்ச தனி மனித சுதந்திரம் என்று ஒரு புறமும் குடிசைகளும் போதாமைகளும் நிறப்பாகுபாடும் இன்னொரு புறமுமாக இருக்கிறது. மிகக் கடுமையான இந்த பொருளியல் பாரபட்சம் தான் அமெரிக்காவின் அசல் முகமாக உள்ளது.

இந்த வளம் மிகுந்த அமெரிக்காவை இன்னும் கொஞ்சம் உற்று நோக்குங்களேன். அங்கே ஆழத்தில், அதன் நாளங்களில் ஓடிக் கொண்டிருப்பது செவ்விந்தியர்களின் இரத்தம். அதன் அடுத்த அடுக்கில் இருப்பது கறுப்பின அடிமைகளின் வியர்வையும் சதையும்.

வரலாற்றின் மீதான காதலும் அது தரும் பன்முக தரிசனங்களும் அரசியல் கருத்தியல்களை விட ஆழமானவை – லத்தீன் அமெரிக்க முத்திரை வாசகம் இது.

ஆனால் அமெரிக்க வரலாறு என்பது சில நூற்றாண்டுகளைக் கொண்டதுதான். கால கணக்கீட்டின்படி பார்த்தால் சிறியது. அமெரிக்க மண்ணுக்கென் பிரத்யேகமாக எவ்வித பன்முகத்தன்மையோ பாரம்பரியமோ கிடையாது. எனவே பண்பாட்டு சிக்கலும் கிடையாது.

லத்தீன் அமெரிக்கன் தூக்கி சுமக்கும் கலை மற்றும் சமூக கலாச்சார சுமைகள் ஒரு பிராந்திய அமெரிக்கனுக்கு கிடையாது. இங்கிருந்து தொடங்குகிறது பாரிய வேற்றுமை.

இன்று வீதியில் முழக்கமிடும் ஒரு கறுப்பினத்தவர் எதிர்கொள்வது இன வேறுபாட்டுச்சிக்கல் மட்டுமல்ல, அவன் இழந்து நிற்பது அவனுடைய பண்பாட்டு வேர்களையும். அதை, பாடல்களாக நடனமாக கவிதைகளாக வலியோடு இந்த உலகிற்கு அவன் சொல்லிவிட முயல்கிறான்.

ஆனால் வளத்தை குவித்து பெரு முதலாளிதுவத்தின் ருசி அறிந்த இந்த தேசத்திற்கு அந்த ஓலங்களை காது கொடுத்து கேட்டிட நேரம் இருக்கிறதா? என்ற கேள்வியை முன்வைத்தால் அதிபர் டிரப்பின் ட்வீட் அதற்கான விடையாக இருக்கிறது.

பொது சொத்துக்களை சூறையாடுபவர்களிடம் இருந்து அமைதியான நேர்மையான குடிமக்களை காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது என்கிறார் ட்ரம்ப்.

அது சரி இருபக்கமும் கொம்பு சீவி விடுவது ஏகாதிபத்தியத்திற்கு புதிதா என்ன? வெள்ளை மேலாதிக்க மனோபாவம் என்று காவலர்களை கழுவேற்றுக் கொண்டிருந்தவர்கள், ’கடைகள் சூறையாடப்பட்டன’ ’அப்பட்டமான சட்ட மீறல்’ என கதை வேறு பக்கம் நகரத் தொடங்கியுள்ளது.

அறுபதிகளில் ஏற்பட்ட ஒரு சமூக ஒழுங்கின்மை தற்போது அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பு புரிந்துணர்வுகள் டிரம்ப் என்ற பெருமுதலாளியின் ஆட்சியில் நடைபெறுமா என்று கேட்டால், கறுப்பினத்தவரான ஒபாமா அதிபராக இருந்த காலத்திலேயே எட்டாத ஒன்று இப்போது எப்படி சாத்தியம்? என்ற அயர்ச்சியான பதில், மாற்று சக்திகளுக்கு சோர்வைத் தரலாம்.

ஆக, இதுவும் கடந்து போகும்… என்பது போல ’இதுவும் விற்றுத் தீர்கப்படும் ஒரு பண்டம்’தானா என்ற ஐயம் எழுகிறது.

ஜார்ஜ் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராட்டம் அமெரிக்காவில் நீடிப்பது போல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்கின்றன.

அந்தப் போராட்டங்களிலெல்லாம் தவிர்க்க இயலாமல் வன்முறை வெடித்து விடுகிறது. கிளர்ந்தெழக் காரணமான ஒடுக்குமுறை நிகழ்ந்த அந்தக் கணத்தில் ஒருங்கிணையும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள், பொதுச் சொத்தை சேதப்படுத்துவதில் நியாயம் இருப்பதை உளவியல் ரீதியாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஒருங்கிணைந்த பொதுமக்கள் போராட்ட வடிவம் ஏதாவதொன்றினை ஜனநாயக ரீதியில் கடைபிடிக்கத் தொடங்கிய பின்பும், பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவது உண்மையில் சமூக விரோதிகளின் செயல்களே. போராட்டத்தில் நுழைந்து போராட்டத்தை சட்டவிரோத ஒன்றுகூடல் என சர்வதேச சமூகத்தின் முன்பு காட்ட, ஆளும் அரசுகளே இத்தகைய கைங்கர்யத்தில் ஈடுபடுகின்றன.

கைதிகள் பரிமாற்ற திருத்தச் சட்டத்தைக் கண்டித்து சீன மைய அரசுக்கு எதிராக ஹாங்காங்வாசிகளின் போராட்டம், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்களின் போராட்டம் என மக்கள் திரள் போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் தார்மீக கோபத்தை, குறிப்பிட்ட சட்டத்தை மாற்ற வலியுறுத்தி அல்லது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு என நாம் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது.

ட்ரம்ப்-ஜின்பிங்-மோடிக்கு எதிரான போராட்டம், இந்தத் தலைவர்கள் உடனே தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தப் போராட்டங்களின் பின்னணியில் இருக்கிறது என, மக்கள் எழுச்சியை கொச்சைப்படுத்தும் ஃபாசிஸ மனப்பான்மையின் முயற்சிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது அதிகாரத்தில் இருப்போருக்கு எதிரான கோபமும், கெட்டிதட்டிப் போன அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்ற உள்ளார்ந்த வெறியும்தான் இந்தப் போராட்டங்களின் உந்துசக்தியாகும்.

இப்படியான போராட்டங்கள் புரட்சிக்கு வித்திட்டுள்ளதை வரலாற்றில் நாம் பார்க்க முடிகிறது. அந்த மாதிரியான புரட்சி வெடித்து விடக்கூடாது என்பதற்காக, மக்களின் தன்னெழுச்சியை முனைமழுங்கச் செய்யும் உத்தியை அரசுகளே திரைமறைவில் செய்வதை அவதானிக்க வேண்டும்.

மக்களின் தன்னெழுச்சியை, ஒரு சில அமைப்புகள் கைவசப்படுத்தி, ஒரு பெரும் பேரணியாக, ஒரு பெரும் ஆர்ப்பாட்டமாக, ஓர் அடையாள உண்ணாவிரதமாக மடைமாற்றி நீர்த்துப் போகச் செய்வதை வரலாற்றில் பார்க்கலாம். அமெரிக்காவிலேயே அப்படியான ஒரு கேலிக்கூத்து நடைபெற்றுள்ளது.

1963-ம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கறுப்பர்களுக்கு சமஉரிமை கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. பர்மிங்ஹாம் நகரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போராட்டங்களில் நாய்களை ஏவியும், தீயணைப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் வெள்ளைப் போலீசார் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

சர்வதேச அளவில் இந்தச் சம்பவம் கவனம் பெற்றதோடு, அமெரிக்க கறுப்பர்கள் மத்தியில் வெள்ளையர்களுக்கு எதிரான கோபமும் அதிகரித்து, பெரும் கிளர்ச்சித் தீயை உருவாக்க புகைந்து கொண்டிருந்தது. இப்போது போலவே…

இதைப் புரிந்து கொண்ட வெள்ளை அதிகார வர்க்கம், கறுப்பின குடியுரிமை அமைப்புகளோடு பேசி, தலைநகர் வாஷிங்டனில் பிரம்மாண்ட பேரணியை நடத்தி மைய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என வசியம் செய்தன.

1960களில் குடியுரிமைகளுக்காகப் போராடிய கறுப்பினத் தலைவர்களிடம் ஒரு கனவு இருந்தது. தலைநகரில் கறுப்பர்களின் பிரம்மாண்ட பேரணியை நடத்தி மைய அரசின் கவனத்தை ஈர்த்து விட வேண்டும் என்பதுதான் அது.

அந்தக் கனவு நிறைவேறியது. கறுப்பர்களின் பிரம்மாண்ட பேரணிக்கு நிதி அளித்தது வெள்ளையர்கள், அந்தப் பேரணியின் வழித்தடத்தை நிர்ணயம் செய்தது வெள்ளையர்கள். எந்த வாசகங்களைக் கொண்ட பதாகைகளை கறுப்பர்கள் கையில் ஏந்த வேண்டும் என்பதை முடிவு செய்ததும் வெள்ளையர்கள்தான்.

இந்தப் பேரணியை ‘வாஷிங்டன் கேலிக்கூத்து’ என கிண்டல் செய்யும் கறுப்பினப் போராளி மால்கம் X, கறுப்பர்களின் உணர்ச்சிப் பிழம்பு எதற்கும் உதவாமல் போனதை இப்படி விவரிக்கிறார்:

வாஷிங்டனுக்கு எப்படி, எப்போது, எங்கே வந்து சேர்வது, எங்கே கூடுவது, பேரணியை எப்போது தொடங்குவது, பேரணி செல்லும் வழி உட்பட அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. முக்கிய இடங்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டன – கறுப்பர்கள் எங்கே மயங்கி விழ வேண்டும் என்பது கூட முன்பே முடிவு செய்யப்பட்டது போல….

லட்சக் கணக்கான கறுப்பர்கள் பங்கேற்ற இந்த வாஷிங்டன் பேரணியில்தான்,”எனக்கு ஒரு கனவு இருக்கறது” என்ற வரலாற்று புகழ்மிக்க உரையை மார்ட்டின் லூதர் கிங் ஆற்றினார்.

ஆனாலும், கறுப்பர்களுக்கு சமஉரிமை எதுவும் போதிய அளவில் கிடைக்கப் பெறவில்லை. பர்மிங்ஹாம் நகரில் கறுப்பர்களின் போராட்டக் களமாக இருந்த பாப்திஸ்ட் கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடித்து நான்கு கறுப்பினச் சிறுமிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். கொஞ்சம் கறுப்பர்களுக்காக வாய் திறந்த அதிபர் ஜான் எஃப் கென்னடியும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் மால்கம் X-ம், மார்ட்டின் லூதர் கிங்-கும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபரைவிட சக்தி வாய்ந்த அமைப்பாக இருக்கும் உளவு அமைப்பான FBI, 1960-களில் தீவிரமாக களமாடிய கறுப்பின போராட்டக் குழு தலைவர்களை குறிவைத்து தாக்கி கொலை செய்தது.

இப்போது அந்த வரலாறு அப்படியே அமெரிக்க மண்ணில் திரும்புகிறது. அதிபர் தேர்தலின் போது 1960-ம் ஆண்டு கறுப்பர்களின் உரிமைகளுக்காக குடியுரிமை அமைப்புகள் தீவிரமாக போராடியதைப் போன்று, கறுப்பர்கள் இப்போதும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். ஆனால் முறையான தலைமையின்றி…

வரும் தேர்தலை முன்னிறுத்தி அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்-பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் கறுப்பர்களின் போராட்டங்களை வாக்குவங்கியாக அறுவடை செய்ய தயாராகி விட்டனர். வழக்கம் போல கறுப்பர்களை காட்டுமிராண்டிகளாக காட்டுவதன் மூலம், எளிதாக வெள்ளையர்களின் வாக்குகளைப் பெற்று மீண்டும் வெள்ளை மாளிகையில் கோலோச்ச முடியும் என்று நம்புகிறார் ட்ரம்ப்.

அமெரிக்க தேர்தல் முறைப்படி, ஒரு மாகாணத்தில் எந்த வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுகிறாரோ, அந்த மாகாணத்தைச் சேர்ந்த ’தேர்வு செய்வோர் அவை’ உறுப்பினர்களின் வாக்குகள் அனைத்தும் அந்த வேட்பாளருக்கு சென்று விடும். தேர்வு செய்வோர் அவையின் வாக்குகள்தான் அதிபரை தீர்மானிக்கும் இறுதி சக்தியாகும். அந்த வகையில் கறுப்பர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களைக் குறிவைத்து, ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையைக் கண்டித்து அரசியல் செய்து வருகிறார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன்.

ஆனால் யார் வெற்றி பெற்றாலும் கறுப்பர்களின் நலனில் பெரிய மாற்றம் எதுவும் வந்து விடப் போவதில்லை. அவர்களே நேரடியாக அரசியல் அதிகாரம் அதிகளவில் பெறும் வரை இந்த மோசமான நிலைதான் தொடரும்.

அதிபர் தவிர, அமெரிக்காவின் அரசியல் அதிகாரம் மிக்க பதவிகளான மேயர், ஆளுநர், செனட் உறுப்பினர்கள் பதவிகளில் அதிகளவில் கறுப்பர்கள் அமரும் போது வல்லரசு நாடான அமெரிக்காவில் கறுப்பர்களின் நிலைமை மாறலாம்.

பொருளாதாரம், அரசியல் வலிமை, அதிகாரம் – இந்த மூன்றும்தான் ஒரு நாட்டின் இயக்கத்திற்கு அடிப்படை. கறுப்பர்களிடம் பொருதார பலம் இல்லை. அதனைப் பெற நீண்ட காலம் ஆகும். ஒரே இரவில் தலைவிதியை மாற்றியமைக்கும் வல்லமை பெற்ற அரசியல் பலமும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் அதிகாரமும் கறுப்பர்களின் கைவசம் இருக்கத்தான் செய்கின்றன. – மால்கம் X

Comments are closed.