ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவருக்கு ஜோ பைடன் நிர்வாகத்தில் இடமில்லை

0

அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 பேர் நியமிக்கப்பட்ட நிலையில், ஆர்எஸ்எஸ் – பாஜகவுடன் தொடர்ப்லிருந்த இருவரை ஜோ பைடன் விலக்கி வைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் 46-ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் பணிபுரிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி, நீரா டாண்டன், உஸ்ரா ஜியா மற்றும் சமிரா பாசிலி உள்ளிட்ட சுமார் 20 பேரை அண்மையில் பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலிலன்போது ஜோ பைடனுக்கு பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகிய இருவருக்கு  மட்டும் பணி ஒதுக்கீடு செய்யாமல் விலக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் இவர்களுக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு காரணமாகவே இவர்களை ஜோ பைடன் நிர்வாகம் விலக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிலுள்ள சுமார் 19 இந்திய அமைப்புகள் ஒன்றிணைந்து, ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர். அதில், “இந்தியாவில் தீவிர வலதுசாரி இந்து அமைப்புகளுடன் உறவு கொண்ட பலர் ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளனர். பைடன் நிர்வாகத்தில் இதுபோன்ற நபர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது” என்று கூறியிருந்தனர்.

அத்துடன், அந்த கடிதத்திலேயே, சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்களைப் குறிப்பிட்டு, “இவர்கள், தீவிர வலதுசாரி நிலைப்பாடு கொண்டவர்கள். இருவரும் இந்து மதவாத குழுக்களிடமிருந்து நிதியுதவி பெற்றவர்கள். இந்து மேலாதிக்கத்திற்கு ஆதரவாகப் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டவர்கள்” என்று சுட்டிக்காட்டி இருந்தனர்.

இவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வெளிநாட்டு முகவர்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு இருந்தது. மேலும், “டிரம்பிற்கு எதிரானவர்களைப் போல காட்டிக்கொண்டு, சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ள ஜனநாயகக் கட்சியில் முக்கிய இடங்களைப் பிடித்துவிட்டனர். ஆனால் இந்தியாவில், இவர்கள் டிரம்பின் வெள்ளை இனவாத சிந்தனையாளர்களுக்குச் சமமானவர்கள், இந்து மேலாதிக்கவாதிகள். அமெரிக்காவில் இந்து சிறுபான்மையினராக தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்கள், இந்தியாவில் மேலாதிக்கவாதிகளாக உள்ளனர்.

அமெரிக்காவில் அவர்கள் இனவெறியை எதிர்த்துப் போராடுவதைப் போலவும் பன்முககலாச்சாரத்தை ஆதரிப்பது போலவும் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் தங்களது சொந்த இனவெறியை நிலைநிறுத்துகின்றனர். எனவே, ஜோ பைடன் நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்து மேலாதிக்கம் உட்பட எந்த மேலாதிக்கத்தை ஆதரிக்கும் நபரும் உங்கள் நிர்வாகத்தில் இருக்கக் கூடாது” என்று புகார் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில்தான், சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோர் அமெரிக்க அரசுநிர்வாகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சோனல் ஷா, ஏற்கெனவே ஜோ பிடனின் ஒற்றுமைக் குழுவில் பணியாற்றியவர். அவரது தந்தை ஆர்எஸ்எஸ் நடத்தும் ‘ஏகல் வித்யாலயா’வை தோற்றுவித்தவர்.

மேலும், பாஜக வெளிநாட்டு நண்பர்கள் குழுவின் அமெரிக்கப் பிரிவு தலைவராகவும் இருந்தவர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமெரிக்கா சார்பிலும் செயல்பட்டு வந்தவர். அமித் ஜானி இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் ஜோ பைடனின் ‘முஸ்லீம் அவுட்ரீச்’ பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நரேந்திர மோடி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களுடன் இவர் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.