மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி

0

நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதையடுத்து அந்த மாநிலம், ஜம்மு கஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு எதிராக, பிரிவினைவாத அமைப்பான காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி உள்ளிட்ட மூன்று அமைப்புகள் சார்பில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா, லெப்டினன்ட் ஜெனரல் கன்வல்ஜீத் சிங் தில்லான் ஆகியோரிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. தில்லான், தற்போது பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற “ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய அமெரிக்கர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு மூன்று நாள்கள் முன்னதாக, அதாவது செப்டம்பர் 19ஆம் தேதி மேற்சொன்ன இழப்பீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தாக்கல் செய்தவர்களில் கஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி தவிர மற்ற இரு அமைப்புகள் குறித்து அடையாளம் தெரியவரவில்லை.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணிக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், விசாரணைக்கு அந்த அமைப்பினர் ஆஜராகவில்லை. பின்னர் அக்டோபர் 6 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் உத்தரவிடப்பட்டது. அப்போதும் அந்த அமைப்பிலிருந்து யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, வழக்கைத் தள்ளுபடி செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

Comments are closed.