அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்து: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு!

0

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமித்ஷா பேசிருப்பது, கடும் கண்டனத்திற்குரியது. அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க திமுக தயங்காது. “இது இந்தியா. ‘இந்தி’யா அல்ல” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசு வெவ்வோறு மொழிகளை பயன்படுத்த அரசியல் சட்டப்பிரிவு 29இல் உரிமை வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இந்தி, இந்துத்துவாவை விட இந்தியா மிகப்பெரியது என தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 22 மண்டல மொழிகளில் ஒன்றுதான் இந்தி என்றும், அது தேசிய மொழி என பொய் பிரசாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியை அவர்களின் முதன்மை மொழியாக மாற்றுவதற்கான முயற்சிகள் அவர்களின் தாய்மொழியை மறுக்கும் முயற்சியாகும். இந்தியா பல்வேறு மொழிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு தேசிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் சங்க பரிவார் பின்வாங்க வேண்டும் என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரு மொழிதான் இருக்கவேண்டும் என்றால், மற்ற மொழி பேசுபவர்கள் எல்லாம் அடிமையாக எடுபிடியாக மாறவேண்டும் என்ற நிலைமை தமிழகத்தில் உருவாகாது. மிரட்டிப்பார்க்கிறீர்களா..? இது சிறுத்தைகள் கூட்டம் ஜாக்கிரதை” என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, கன்னட மொழி தினத்தை எப்போது கொண்டாடவுள்ளது என கர்நாடகாவின் மற்றொரு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளை அழித்து, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை திணிக்கப் பார்ப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளரான கொடியேறி பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இந்தியை திணிக்க நினைப்பது நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது என்றும், இதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் கேரள அமைச்சர் ஏ.கே.பாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, அது நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் என எச்சரித்துள்ளார்.

Comments are closed.