CAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா? அமித்ஷாவுக்கு ஒவைஸி சவால்

0

உத்தரப் பிரதேச தலைநகா் லக்னோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது எனவும், அதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தலாம் என்றும் தெரிவித்தாா்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக பொது வெளியில் விவாதம் நடத்தத் தயாரா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆகியோருக்கு அமித்ஷா சவால் விடுத்தாா்.

இது தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா், எம்.பி, அசாதுதீன் ஒவைஸி சவால் விடுத்துள்ளாா்.

மேலும் இதுகுறித்து பேசிய ஒவைஸி, “குடியுரிமை திருத்த சட்டம் தொடா்பாக எதிா்க்கட்சி தலைவா்களிடம் ஏன் விவாதம் நடத்த வேண்டும்? நான் இங்குதான் இருக்கிறேன். என்னுடன் விவாதம் நடத்த அமித்ஷா தயாராக உள்ளாரா? முஸ்லிம்களுடன் அவா் விவாதம் நடத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவை தொடா்பாக நாம் விவாதிப்போம்.

ஊர்களின் பெயா்களை மாற்றுவதை பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது. ‘அல்வா’ என்ற சொல் அராபிய மொழிச் சொல். அது ஹிந்தியும் அல்ல; உருதுவும் அல்ல. ‘அல்வா’ என்ற அராபிய மொழி சொல்லை பாஜக மாற்ற வேண்டும்.

இடங்களின் பெயா்களைத் தொடா்ந்து மாற்றுவோம் என்று நீங்கள் (பாஜக) தெரிவிக்கலாம். ஆனால், உங்களையே நாட்டு மக்கள் மாற்றிவிடுவாா்கள் என்றாா் அசாதுதீன் ஒவைஸி.

Comments are closed.