சூரப்பாவிற்கு எதிராக நேரில் புகார் அளிக்கலாம் -விசாரணை அதிகாரி

0

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு எதிராக பேராசிரியர் பணி நியமனத்தில் 200 கோடி ஊழல், தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் 80 கோடி ஊழல், மகளுக்கு பணி வழங்கியது, அரியர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு தவறான தகவல்களை அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை விசாரிக்க தமிழக அரசு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது.

சூரப்பாவிற்கு எதிராக விசாரணை சரியாக நடைபெறவும், ஆவணங்கள் அழிக்கப்படாமல் இருக்கவும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையிலும் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையில்லை. தான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை என சூரப்பா தெரிவித்துள்ளார்.சூரப்பாவிற்கு எதிராக அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அதிகாரியாக நீதிபதி கலையரசன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து யாரிடமெல்லாம் தகவல்கள் இருக்கிறதோ, அவர்கள் தம்மை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம், ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் என கலையரசன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புகார்கள் குறித்தும் தனித்தனி விசாரணை நடத்தப்படும் என்றும், தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடுகள் என புகார் எழுந்துள்ளதால் தேவைப்பட்டால் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கலையரசன் கூறினார்.

“விசாரணைக்காக ஒரிரு நாட்களில் அலுவலகம் துவங்கப்பட இருக்கிறது. அங்கு காவல்துறையினர், ஆடிட்டர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். அதன்பிறகு விசாரணை முழு வீச்சில் நடைபெறும். சூரப்பா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிப்போம். மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றும் நீதிபதி கலையரசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments are closed.