அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.200 கோடி ஊழல் புகார்

0

திருச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் தனிப்பிரிவில் அளித்த புகாரில், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குநர் சக்திநாதன் ஆகியோர் தற்காலிக பேராசிரியர் நியமனத்தில் ஒவ்வொரு நபர்களிடமிருந்து 13 முதல் 15 இலட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு நியமனங்களைச் செய்ததாகவும் இதன் மூலம் இருவரும் 80 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாகவும் இருவரும் இணைந்து 200 கோடி ரூபாய் அளவிற்கு பல்கலைக்கழகத்தில் ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

வரதராஜன் என்பவர் உயர்கல்வித் துறைக்கு அனுப்பிய புகாரில் தேர்வுத் துறையின் அலுவலக உதவியாளருக்கு பதவி உயர்வு அளிப்பதில் முறைகேடு நடந்ததாகக் குறிப்பிடப்பட்டது.

இவைத்தவிர தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்திற்கு லஞ்சம், முறைகேடான பணிநியமனங்கள், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் AICTE-க்கு தவறான தகவலை அனுப்பியது, தனது மகளை முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியது, நிதி முறைகேடுகள், தேர்வு முறைகேடுகள் என தொடர்ந்து சூரப்பா மீது புகார்கள் எழுந்துள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்தது.

சூரப்பா மீதான பல்வேறு முறைகேடு புகார்கள், விதி மீறல் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. மூன்று மாத காலத்திற்குள் அந்த விசாரணைக் குழு தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசு அமைக்கும் இந்த குழு அரசுக்கு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது

கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி  நியமனத்திற்கு மாநில அரசு உட்பட திமுக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.