அஸ்ஸாமின் நிலக்கரி ஊழல்

0

அஸ்ஸாமின் நிலக்கரி ஊழல்

NRC விவகாரத்தால் அஸ்ஸாம் மாநிலம் நாடளவில் பலரின் கவனங்களை ஈர்த்து வருகிறது. சுமார் 40 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாக குடியமர்ந்தவர்கள் என்று மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதுதான் கடந்த மாதங்களில் Breaking News. ஆனால் இந்த பரபரப்பில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் இயற்கைவள சுரண்டல் மற்றும் முறைகேட்டை யாரும் கவனிக்கவில்லை. அதுதான் அவர்களின் விருப்பமும் கூட.

அதாவது அஸ்ஸாம் மாநிலத்தின் நிழல் உலக நிலக்கரி மாஃபியாக்கள் அங்குள்ள நிலக்கரிகளை சட்டவிரோதமாக கடத்தி வருவதாகவும், இதற்காக பல இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இந்த மாஃபியா கும்பலுக்கு அஸ்ஸாம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஆதரவு தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே இதுகுறித்து பல சமூக அமைப்புகள் மக்கள் மன்றத்தில் பேசிவந்தனர். ஆனால் அப்போதெல்லாம் இதற்கு முக்கியத்துவம் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தற்போது இது விஸ்வரூபம் எடுக்க காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் பர்தோலி மிக முக்கிய காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவல் நிலக்கரி மாஃபியாக்கள் உடன் இருக்கும் புகைப்படங்களை சில தகவல்களுடன் இணைத்து அஸ்ஸாம் மற்றும் தேசிய ஊடகங்களுக்கு அனுப்பினார். அந்த புகைப்படங்களில் முதல்வர் நிலக்கரி மாஃபியா கும்பல்களின் முக்கிய புள்ளி சுனில் குமார் உடன் இருக்கிறார்.

முதலில் யார் இந்த சுனில் குமார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அஸ்ஸாம் மாநிலத்தில் நிலக்கரிகள் அதிகமாக கிடைக்கும் இடங்களில் டின்சுகிய மாவட்டத்திற்கு முதலிடம்.. இங்கு அரசு மற்றும் அரசு அனுமதியோடு நிலகரிகளை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி அரசு மேற்பார்வையில் நடைபெற்றும் வரும் பணிகளை காட்டிலும் சட்டவிரோதமாக நிலகரிகளை எடுக்கும் வேலைகள் அதிகமாக நடந்து வருகிறது.

டின்சுகியா மாவட்டமானது அஸ்ஸாமின் கிழக்கு பகுதியின் ஓரத்தில் உள்ள எல்லையோர மாவட்டம். இதன் எல்லையில் தான் அருணாசல பிரதேசம் தொடங்குகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் நிறைய மழைக்காடுகள் நிறைந்துள்ளன. மேலும் அரசின் ஆவணங்களின்படி 17 ரிசர்வ் காடுகள் உள்ளது. ஆகையால் முந்தைய மாநில அரசு தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்காமல் மாநில அரசுக்கு சொந்தமான Coal India Limited நிறுவனத்தின் வசம் பொறுப்பை ஒப்படைத்தது.

பொதுவாக நிலகரிகளை மண்ணிலிருந்து எடுக்க பிரம்மாண்ட ஆழ்துளையிட்டு எடுப்பார்கள். இந்த துளையிட்டு எடுக்கும் முறையை Rat hole technique என்று அழைப்பார்கள். அதாவது எலியை போன்று சிறுதுளை வழியே பெரு துளைகளை உண்டாக்குவதாகும். அப்படி எடுக்கப்படும் நிலக்கரிகள் அங்குள்ள ஆலைகளில் அதிக வெட்பத்தால் எரியூட்டப்பட்ட திரவ எரிபொருளாக மாற்றப்படும். இந்த முறையில் தான் அங்கு நிலக்கரி வயல்கள் அமைப்பட்டுள்ளது. இந்த மாதரியான திரவ நிலக்கரியை Coke Coal என்பர். இந்த வகை எரிபொருள் மின் உற்பத்திக்கு மிகவும் ஏற்றது.

இதுமாதிரி ஒரு ஆலையின் கிளை அமைக்க வேண்டுமேன்றால் அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் சுற்றுச்சூழல், வளிமண்டலம் மற்றும் வன உயிரினங்கள் பாதிப்படையும். ஆகையால் அவசியமான எண்ணிக்கையில் மட்டுமே அங்கு ஆலைகள் அமைக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் எம்.பி. அளித்த குற்றச்சாட்டு கடிதத்தில் அனுமதிக்கபட்ட எண்ணிக்கையை விட சட்டவிரோதமாக அதிகமாக கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஆலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்படவில்லை.

நாள் ஒன்றுக்கு மட்டும் சட்டவிரோதமாக போலியான ஆவணத்தை பயன்படுத்தி 600 கனரக லாரிகள் நிலக்கரியை ஏற்றி செல்கிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் முறைகேடுகளை சுட்டிகாட்டி 2018 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் ஆர்வளர் ஸ்ரீதர் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நாள் ஒன்றுக்கு மட்டும் சுமார் 600டன் நிலகரிகள் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டுகிறது. இதனால் இயற்கைக்கு பல சிதைவுகள் ஏற்படுகிறது என்றார். ஆகையால் இதனை தடுத்து நிறுத்திடவும், சட்ட விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த ஆலையில் பணி புரியும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தாலும், தொழில் அனுபவம் இல்லாத நபர்களை சட்ட விரோதமாக பணியமர்த்தியத்தின் காரணமாகவும் அடிக்கடி மரணங்கள் அங்கு ஏற்படுள்ளது. இந்த மரணங்களை அரசு மூடி மறைத்து வருகிறது. உள்ளூர் ஊடகமும் இதை பற்றி வாய் திறப்பதில்லை. தொடர்ந்து அஸ்ஸாமில் நடைப்பெற்று வரும் இந்த முறைகேட்டில் மாவட்ட நிர்வாகத்தின் கரங்களும் இணைந்துள்ளது என்று குற்றம் சாட்டுகிறார் காங்கிரஸ் எம்.பி. இவ்வளவு பெரிய முறைகேடுகள் அரசின் உதவி இல்லாமல் நடைப்பெறுவது சாத்தியமில்லை.

அதிகார உயர்பீடங்களின் ஆசிர்வாதத்தில் தான் சுனில்குமார் போன்ற மாஃபியாக்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அனைத்து குற்றசாட்டுகளை ஆளும் பாஜக அரசு மறுத்துவிட்டது. இதுபற்றி பேசிய பாஜகவின் அஸ்ஸாம் மாநில செய்தி தொடர்பாளர் பபித்ரா இந்த முறைகேடுகள் அனைத்தும் அரசுக்கு அறிந்த விஷயம் என்றும், இது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். தெரிந்தோ தெரியாமலோ முறைகேடுகள் நடைபெறுவதை ஒப்புக்கொண்டார் பாஜக செய்தி தொடர்பாளர். ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் இதுவரை முறைகேடாக 300 கனரக லாரிகள் மூலம் கடத்தப்பட்ட 9,500டன் நிலகரிகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது மற்றும் 500 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது என்றார்.

ஆனால் பாஜக அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் போதுமானது கிடையாது. இதை சொன்னது எதிர்கட்சிகள் அல்ல குவகாத்தி உயர் நீதிமன்றம்.. அரசு இதுவரைக்கும் செய்துள்ள நடவடிக்கைகள் நிலக்கரி முறைகேடுகளுக்கு தீர்வை தராது. உண்மையில் அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் முறைகேடான கடத்தலை தடுத்து நிறுத்துவதை விடுத்து சட்டவிரோத நிலக்கரி ஆலைகள் மற்றும் வயல்களை மூட வேண்டும் என்றது. மேலும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல்துறைக்கு புவியியல் மற்றும் சுரங்க இயக்குனரின் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மாவட்ட நிர்வாகம் சட்டவிரோத கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டி கோரிக்கை முன்வைக்கபட்டிருந்தது.

நடைபெற்று வரும் அனைத்து முறைகேடிற்கும் முக்கிய புள்ளி சுனில்குமார் தான். இவனின் பெயரில் தான் அனைத்து கடத்தல்களும் நடைப்பெறுகிறது. டின்சிகியா மாவட்டத்தின் துணை ஆணையருக்கு மாநில புவியியல் மற்றும் நிலக்கரி சுரங்க இயக்குனரகத்தின் இயக்குனர் அனுப்பிய முக்கிய கடிதத்தில் சுனில்குமார் பெயர் நிலக்கரி மாஃபியாக்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் சுனில்குமார் மீது இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை.

பொதுமக்கள் கண்துடைப்புக்காக அவ்வப்போது சில லாரிகளை கைப்பற்றி ஒருசிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் நம்மூரில் மணல் கொள்ளையர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை போன்றது. காங்கிரஸ் எம்.பி. முன்வைக்கும் கோரிக்கையை நீதிமன்றம் செவிசாய்த்து சுதந்திரமான நீதி விசாரணையை நடத்த வேண்டும். மாநிலத்தின் வளத்தை கொளையடிக்கும் ஒரு மாஃபியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அரசு பிரதிநிதிகளையும் விசாரித்து தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அமேசான் காடுகள் பற்றி எரிந்தபோது Save Amazon என்று போராடினோம். இப்போது நமது சொந்த நாட்டின் காடுகள் செயற்கையாக மாஃபியாக்கள் மூலம் கொள்ளையடிக்கப்படுவதை முதலில் கவனத்தில் கொண்டு இதற்காக போராட முன்வர வேண்டும்.

-ஆரூர்.யூசுப்தீன்

Comments are closed.