பாபா ராம்தேவ் மருந்தை எப்படி அங்கீகரித்தீர்கள்? மோடி அரசுக்கு கேள்வி

0

சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் (Coronil) ‘கொரோனா சிகிச்சைக்கு உதவும் ஒரு மருந்து’ என்று மத்திய பாஜக அரசின் ஆயுஷ் அமைச்சகம் அண்மையில் அங்கீகாரம் அளித்தது.

‘கொரோனில் கிட்’ மருந்திற்கு உலக சுகாதார அமைப்பின் (W.H.O.) தரச்சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது என்று பதஞ்சலி நிறுவனமும் அறிக்கை வெளியிட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில் சாமியார் ராம்தேவ் பேசுகையில், நவீன மருத்துவ முறையை “மருத்துவ பயங்கரவாதம்” என்று கடுமையாகச் சாடினார். ஆயுர்வேத கலவையான கொரோனிலை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், ராம்தேவின் கொரோனில் மருந்துக்கு, தாங்கள் எந்த சான்றிதழும் அளிக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. “எந்த பாரம்பரிய மருந்தின் செயல்திறன் குறித்தும் தாங்கள் ஆய்வு செய்யவோ சான்றிதழ் வழங்கவோ இல்லை” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரிவு டிவிட்டரில் விளக்கம் அளித்தது.

பதஞ்சலி தயாரித்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், எத்தனை பேருக்கு ஆய்வு செய்யப்பட்டது? ஆய்வின் முடிவு என்ன? ஆய்வு குறித்து எந்த நிறுவனம் இவர்களுக்கு சான்று வழங்கியது? அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு பொருளை, மருந்து என்று கூறி போலியாக உலவ விடும் நபர்களுக்கு ஆதரவாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே செயல்பட்டது ஏன்? என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

பதஞ்சலியின் ‘கொரோனில்’ மருந்து கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றும் என்றால், எதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு மருந்துக்கு செலவு செய்தீர்கள்? என்றும் மோடி அரசை மருத்துவ கூட்டமைப்பு கேட்டுள்ளது.

Comments are closed.