பாபர் மஸ்ஜித் இடத்தில் எந்த கோவிலும் இருந்ததாக ஆதாரம் இல்லை- வழக்கறிஞர்

0

இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் இடத்தில், முன்பு கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வக்பு வாரியத்தின் சார்பு மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடைபெற்றுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

இந்து அமைப்புக்களின் வாதங்கள் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், வக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண், நேற்று தனது வாதத்தில் பேசியதாவது: “ராமர் பிறந்த இடம், ராமர்கோவில் இருந்த இடம் என்று இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வாதங்களை வைத்து வருகிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரமே இல்லை.

ராமர் அங்குதான் பிறந்தார் என்பதை எப்படி இவர்கள் வரலாற்று ரீதியாக நிரூபிப்பார்கள்? எப்படி அவர்களால் உறுதியான சாட்சியங்களை வழங்க முடியும்? மசூதியில் ஒரே ஒரு மயில் சிலையும், தாமரை சிலையும் கிடைத்தால் அது இந்து கோவிலா? வேதகாலத்தில் கோவில்கள் எதுவும் இல்லை, மடங்கள் இல்லை. சிலை வழிபாடுகளும் கிடையாது. மத நிறுவனங்கள் புத்தருடைய காலத்தில் தான் வந்தன. ஆனால் சிலை வழிபாடு எப்போது தொடங்கியது என்பதை உறுதியாக கூறமுடியாது.

நான் 1828இல் இருந்து வாதங்களை தொடங்க நீங்கள் உத்தரவு பிறப்பித்தால் என்னால் அந்த இடத்தில் மசூதி இருந்தது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை நிறுவமுடியும். சரித்திரம் என்று கூறும் இதே நபர்கள் தான், 1934இல் இருந்து தங்கள் கண்முன் இருந்த ஆதாரங்களை மறந்துவிட்டார்கள். பாபர் மசூதி இருந்த ஆதாரத்தையே மறந்துவிட்டனர்.

இங்கு மசூதி கட்டப்பட்ட நேரத்தில் எந்த இந்து கோவிலும் இல்லை.இதில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறதோ அதுதான் இந்தியாவின் முகமாக இருக்கும். ஏனெனில் இந்தியா மதச்சார்பற்ற நாடு. நீதிமன்றம் சரியான முடிவை எடுக்க வேண்டும். தீர்ப்பு வழங்கும் முன்பு, உச்ச நீதிமன்றம் அதனைக் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த வழக்கு இந்தியாவின் எதிர்காலம் தொடர்பானது” இவ்வாறு அவர் ராஜிவ் தவான் தெரிவித்தார்.

Comments are closed.