மத்திய பாஜக அரசின் தனியார்மய கொள்கையை கண்டித்து மார்ச் 15, 16 ம் தேதிகளில் அகில இந்திய அளவில் நடைபெறும் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்க இருப்பதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர், மத்திய அரசின் தனியார் மய கொள்கையால் வங்கித்துறையின் சேவைகள் பாதிக்கப்பட்டு, சாமானிய மக்கள் விவசாய கடன், தொழில் கடன், கல்வி கடன், வீட்டுகடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர்.
நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்கள் சேவை திட்டங்களும் பாதிக்கப்படுவதுடன், சேவைத்துறையாக உள்ள வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் ஈட்டும் துறையாக மாறும் என அச்சம் தெரிவித்தனர். இதற்காக இரு தினங்கள் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளும் வேலை நிறுத்தம் செய்வதாக கூறினர். இதற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைய மத்திய அரசின் கொள்கைகளும் நடவடிக்கைகளுமே காரணம் என கூறிய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், இதனை காரணம்காட்டி தனியார் முதலீடுகளை அனுமதிப்பது சரியானதல்ல என தெரிவித்தனர்.