வங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி

0

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இதுபோலவே மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கிவிட்டு கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி உள்ளனர்.

இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

வங்கிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளில் இருக்கும் விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் அதிபர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

இநிலையில், கடந்த 24ஆம் தேதி ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்து உள்ளது.

தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments are closed.