ஊரடங்கு நீடிப்பு: ஹைதராபாத்தில் தற்கொலை செய்துக்கொண்ட இடம்பெயர்ந்த தொழிலாளி

0

ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் தன் சொந்த ஊருக்கும் செல்ல முடியவில்லை என்ற மன வருத்தத்தினாலும், உணவு பணம் ஏதும் இல்லை என்ற  கவலையினாலும் ஹைதராபாத்தில் வேலை செய்து வந்த பீகாரி இளைஞர் ஒருவர் தன்னுடைய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முகமது அமீர் (24) திங்கள் கிழமை அன்று ஹைதராபாத் உப்பலில் உள்ள தனது வாடகை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். பீகாரில் இருந்து அமீரின் குடும்பம் நேற்றைய தினம் அவனிடம் தொலைபேசியில் பேச அழைத்துள்ளனர். நெடுநேரமாக அவர்களது அழைப்பிற்கு அமீர் பதிலளிக்கவில்லை. இதனால் ஹைதராபாத்தில் உள்ள அவனது நண்பனை தொலைபேசியில் அழைத்து விசாரித்துள்ளனர். அமீரின் நண்பன்  அறைக்குச் சென்ற பார்த்த பின்னர் இந்த தற்கொலை சம்பவம் தெரிய வந்துள்ளது.

பீகாரை சேர்ந்த அமீர் அசீம் என்ற தனது நண்பனுடன் ஹைதராபாத்தில் வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளான். அசீம் மார்ச் 13 அன்று பீகார் சென்றிருந்த நிலையில் மார்ச் 23 அன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அமீர் தனியாக  இருந்துள்ளார். பணம் இல்லாமல் தன்னுடைய அறைக்கு வாடகை கட்ட இயலவில்லை, உணவிற்கு போதிய பணமில்லை என தனது பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவனது குடும்பத்தினர் வாடகை செலுத்த தேவையான பணத்தை அனுப்புவதாக அமீருக்கு உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மே3 வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பினால் தன் சொந்த ஊருக்கு செல்ல இயலவில்லை என்ற வருத்தத்தில் அமீர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளான்.

Comments are closed.