பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்

0

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய காரணமாக உள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது.

ஆகஸ்ட் 31க்குள் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில், நீதிபதி எஸ்.கே.யாதவ், சிஆர்பிசி 313-ஆவது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை, ஜூன் 4 முதல் பதிவுசெய்து வருகிறார்.

முன்னதாக உமாபாரதி இந்த வழக்கில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அதை தொடர்ந்து, ஜூலை 23அன்று முரளி மனோகர் ஜோஷியும், ஜூலை 24 அன்று எல்.கே. அத்வானியும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

இதேபோல, சிவசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. சதீஷ் பிரதான், ஜூலை 22ஆம் தேதியாக இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, சிபிஐ, 49 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அவர்களில் 32 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். மீதமுள்ள 17 குற்றம்சாட்டப்பட்டவர்கள் இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Comments are closed.