பா.ஜ.க. அரசின் நீதித்துறை, நீதிபதிகள் மீதான ஆதிக்கம்

0
இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக கடந்த 2018 ஜனவரி 12 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப் மற்றும் மதன் லோகூர் ஆகியோர் பத்திரிகையளர்களை சந்தித்தனர். அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றம் சாட்டியும், நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க. அரசு தலையிடுவதையும், வழக்குகள் ஒதுக்கும் விசயத்தில் பாரபட்சம் காட்டப்படுவதையும் விமர்சித்தும் நீதிபதிகள் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தினர். “உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சில தீர்ப்புகள் ஜனநாயகத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே எங்கள் கவலைகளை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை உள்ளது” என்றனர் நீதிபதிகள்.
அப்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்த ரஞ்சன் கோகோய் தான் அடுத்த உச்சநீதிமன்ற நீதிபதியாக வருவார். இவர் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத செயல்பாட்டிற்கு தடையாக இருப்பார் என்று பலரும் நம்பினர். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. பா.ஜ.க.வின் கொள்கை திட்டங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய ரஞ்சன் கோகோய் மீது சந்தேகங்கள் எழுந்தன. ஒய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குள் அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த சந்தேகம் உறுதியானது.
பொதுவாக நீதித்துறையிலிருந்து ஓய்வு பெறும் நபர்கள் அரசியல் சார்ந்த பதவிகளில் அமர்வது குறைவு. ஏதேனும் முக்கிய விசாரணை அமைப்புகளிலும், கமிட்டிகளிலும், அரசுக்கு உதவி புரியும் வகையிலான திட்டங்களில் பொறுப்பாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் பா.ஜ.க. தற்போது ஆளுநர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நீதிபதிகளை நியமிப்பதன் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கைக்கு வேட்டு வைத்து வருகிறது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்தான சட்ட ஆணையத்தின் அறிக்கை 1958ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டது. அதில் ஓய்வுக்கு பின் இரண்டு வகையான பொறுப்புகளில் நீதிபதிகளை நியமிக்கலாம். பொதுப்பிரச்சனைகளில் அரசுக்கும் மக்களுக்குமிடையில் பாலமாக இருந்து கருத்துகளை கேட்டு நடுவர்களாக முக்கிய விசயங்களை கையாளலாம். இரண்டாவது, முக்கிய விசாரணை குழுக்களில் இணைந்து பணி செய்யலாம். அதே போல் ஓய்விற்கு பிந்தைய அரசாங்க வேலைவாய்ப்பினை, பொறுப்புகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது. பணி ஓய்விற்கு பின் நீதிபதிகள் அரசு பதவிகளை பெறுவது, நீதித்துறையை மக்களிடையே குறைத்து மதிப்பிட வைத்துவிடும் என்ற அசத்தை பல தலைமை நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.  ஓய்விற்கு பின் பதவிகளை பெறுவதை மனதில் கொண்டு தீர்ப்புகளை எழுதும் சூழல் உருவாகும் என்ற ஆபத்தை சுட்டிகாட்டியுள்ளனர். இந்த அறிவுறுத்தல்களுக்கு பின்பும் தற்போது பா.ஜ.க. அரசு நீதிபதிகளை கையாளும் மோசமான சம்பவங்கள் மோசமான முன்னுதாரணங்களாக உருவாகின்றதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளும் எழத்தொடங்கின. ஊழல் குற்றச்சாட்டுகளும், பாலியல் புகார்களும் சுமத்தப்பட்டன. என்.ஆர்.சி. குறித்த தீர்ப்பு இன்று நாடே எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு துவக்கமாக அமைந்தது என கேரவன் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 2013 முதல் 2018 வரை என்.ஆர்.சி. சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் கோகாய் விசாரித்துள்ளார். அதில் அஸ்ஸாமில் என்.ஆர்.சி. நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குடிமக்களே தங்களது குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பு 80 ஆண்டு கால பிரச்சனைக்கு சரியான தீர்வு கொடுப்பதற்கு மாறாக அவரின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலும், தீவிர ஒரு சார்பு கொண்ட தீர்ப்பாகவும் விவாதிக்கப்பட்டது. அதன் பின்புலமும் விவாதிக்கப்படக்கூடியதாக மாறியது.
அஸ்ஸாமை சார்ந்த கோகாய் அஸ்ஸாமில் என்.ஆர்.சி. வேண்டும் என்று போராடக்கூடிய ஒரு சமூகத்தை சார்ந்தவர். கல்லூரி நாட்களில் வரலாற்றுத்துறை பேராசிரியர் உதயாதித்யா பராலி உடனான தொடர்பும் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகளில் அஸ்ஸாமை வங்கதேசத்தவர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள் என்ற செய்தியின் தாக்கமும்தான் இப்படி தீர்ப்பு கொடுக்க வைத்தது என பேசப்பட்டது. என்.ஆர்.சி.நடைமுறைப்படுத்தப்படும் என்ற தீர்ப்பு வந்த பிறகு அதனை குறித்து உதயாதித்யா கருத்து வெளியிட்டார். “அஸ்ஸாமில் இருக்கும் அந்நிய குடியேறிகள் குறித்தும் பூர்வகுடிகள் தொடர்பான முழுமையான பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று நான் வெளிப்படுத்தியதையே கோகாய் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய சிறந்த மாணவன் இறுதியில் என்.ஆர்.சி.யை செயல்படுத்திவிட்டான்” என உதயாதித்யா கூறியது அந்த தீர்ப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
அஸ்ஸாமில் நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் பிரச்சனையை பயன்படுத்தி அதில் பிரிவினைவாத அரசியல் செய்து வருவது பா.ஜ.க. என்.ஆர்.சி.யை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்தியதை பா.ஜ.க. வரவேற்றதையும் நாம் மறக்க முடியாது.
நாட்டை உலுக்கிய ரஃபேல் முறைகேடு ஒப்பந்தம் தொடர்பான வழக்கை கோகாய் கையாண்ட விதமும், அந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக அவர் நடந்து கொண்ட விதமும் சர்ச்சைக்குள்ளானது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு வந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததும் இந்த வழக்கில் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளை கருத்தில் கொள்ளாததும் பெரும் விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இறுதியாக அரசின் முடிவில் தவறில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தது பா.ஜ.க.விற்கு சாதகமாக பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு பச்சை கொடி காட்டியது போல் அமைந்தது. பாபரி வழக்கை தேசமே எதிர்பார்த்து காத்திருந்தது. நிலம் யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு, இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. இந்த அநீதியான தீர்ப்பு குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்பட பலர் தங்கள் ஆட்சோபனைகளை தெரிவத்திருந்தனர். முன்னாள் நீதிபதி கங்குலி இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார். “500 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலம் யாரிடம் இருந்தது என்பது யாருக்கு தெரியும்? வரலாற்றை மீண்டும் எழுத முடியாது. உரிமைகளை பாதுகாப்பதே தற்போதைய தேவை. கோகாய் போன்ற தலைமை நீதிபதியிடமிருந்து இப்படி ஒரு தீர்ப்பு வருவதில் வியப்பேதுமில்லை” என்றார்.
இதுமட்டுமல்லாம் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவை நீக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அது செல்லும் என்று அளித்த தீர்ப்பு, கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேர்தல் நன்கொடைப்பத்திரம் தொடர்பான வழக்குகளை தாமதப்படுத்தியது என சங்பரிவார பாசிச பா.ஜ.க.விற்கு ஆதரவான போக்கை கோகாய் தொடர்ந்து கடைப்பிடித்தது விவாதங்களாக மாறின.
மறுபுறம் நேர்மையான நீதிபதிகள் மீதான சங்பரிவார்களின் அடக்குமுறைகளும் தொடர்கின்றன. சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவிக்க நீதிபதி லோயாவிடம் 100 கோடி பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு உடன்படாத நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் தனக்கிருந்த அழுத்தங்கள் குறித்து தனது குடும்பத்தினரிடம் லோயா கூறியிருந்தார்.
சமீபத்தில் என்.பி.ஆர். – என். ஆர்.சிக்கு எதிராக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க குண்டர்கள் நடத்திய கலவரத்தில் ஈடுபட்ட சங்பரிவார குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையின் செயலை கண்டித்து உடனே வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அன்றிரவே பணிமாற்றம் செய்யப்பட்டடார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, எந்த காரணங்களை குறிப்பிடாமல் மேகாலாய நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது நீதித்துறை வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 75 அதில் 4 லட்ச வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி நீதிமன்றத்தை திறம்படவே நடத்தி வந்தார். சில ஆக்கப்பூர்வமான புதிய நடைமுறைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டு வந்த தஹில்ரமணி, மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை ஏற்காமல் பதவியை ராஜினாமா செய்தார்.
அதே போல் 2015ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற நீதிபதி கே.எம். ஜோசப்பின் பதவி உயர்வை பா.ஜ.க. அரசு தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் இருந்த போது அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதனாலே இந்த பாபரப்பட்சம் காட்டப்பட்டதென்று விவாதிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து நீதிபதிகள் நியமனம், வழக்கு ஒதுக்கீடு, விலைபேசப்பட்ட தீர்ப்புகள், அச்சுறுத்தப்பட்டு வருகின்ற நீதிபதிகள் என சர்ச்சைகள் பா.ஜ.க ஆட்சியில் தொடர்கின்றன. இது நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய உச்சபட்ச நம்பிக்கையின் மீதான தாக்குதல் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
M.A. இத்ரீஸ்

Comments are closed.