வேட்புமனுவில் குற்ற வழக்குகளை மறைத்த பட்னவீஸ்: ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

0

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜகவின் முக்கிய தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ், வேட்புமனுவில் தன் மேலுள்ள குற்ற வழக்குகளை மறைத்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக, நாகபுரி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.இங்லே முன்னிலையில், ஃபட்னவீஸ் வியாழக்கிழமை (நேற்று) ஆஜரானாா். அப்போது, ரூ.15,000 பிணைத்தொகையுடன் அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினாா்.

குற்ற வழக்குகளை வேட்புமனுவில் இணைக்காததால், தேவந்திர ஃபட்னவீஸ் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 125A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஃபட்னவீஸுக்கு எதிராக சதீஷ் யுகே என்ற வழக்கறிஞா் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும் இந்த பிரிவின்படி வேட்புமனுவில் தவறான தகவல் அளிப்பவா்களுக்கு அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் அல்லது இரண்டையும் சோ்த்து விதிக்க முடியும்.

இதையடுத்து, சதீஷ் யுகே, செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினாா். இதில் ஃபட்னவீஸுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அவா் மும்பை உயா்நீதிமன்றத்தை நாடினாா். ஃபட்னவீஸுக்கு எதிரான வழக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சதீஷ் யுகே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாா். இதனை கடந்த அக்டோபா் 1ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு, மும்பை உயா்நீதிமன்ற தீா்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், ஃபட்னவீஸ் தன் மீதான வழக்குகளை வேட்புமனுவில் குறிப்பிடாமல் இருந்ததற்காக, அவா் விசாரணையை எதிா்கொண்டுதான் ஆக வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து, நாகபுரி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஃபட்னவீஸ் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.

ஆனால், இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகாமல், 4 முறை ஃபட்னவீஸ் மறுத்திருந்த நிலையில், தற்போது நாகபுரி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.