பாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்

0

முதல் இரண்டு கட்ட பொது முடக்க காலத்தில் மட்டும் ரூ.33 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு தொழிலாளர்கள் ஊதிய இழப்பை சந்தித்துள்ளதாக இந்திரா காந்தி மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை முதற்கட்ட பொதுமுடக்கமும், ஏப்ரல் 15 முதல் மே 3 வரை 2ஆம் கட்ட பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், “இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் கிடைப்பது மற்றும் அவர்களால் ஏற்படும் பாதிப்பு’’ என்ற தலைப்பில், இந்திரா காந்தி மேம்பாட்டு ஆய்வு மையம் ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.
கூட்டு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மோஹித் சர்மா, ஐஜிஐடிஆரின் சர்காம் குப்தா மற்றும் ஐஎல்ஓ-வின் சேவியர் எஸ்டூபியன் மற்றும் பாரதி பிர்லா ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.

அதில், முதல் இரண்டு கட்ட பொது முடக்கத்தால் முறைசாரா தொழிலாளர்களே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். “முதற்கட்ட பொது முடக்கத்தால் 11.6 கோடி பேரின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாக அமைந்த நிலையில், அவர்களில் 10 கோடியே 40 லட்சம் பேர் முறைசாராத் தொழிலாளர்கள். இரண்டாம் கட்டத்தில் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியான 7.9 கோடி பேரிலும் முறைசாரா தொழிலாளர்களே அதிகம். இவர்கள் வேலை இழக்கும் அபாயமும் உருவாகி உள்ளது” என்று ஆய்வு கூறுகிறது.

இந்த காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளாக, “மொத்த வர்த்தகம், ஹோட்டல் தொழில், போக்குவரத்து, உற்பத்தி மற்றும் பொழுதுபோக்குத் துறை, மால்கள் மற்றும் திரைப்பட அரங்குகள்” குறிப்பிடப்பட்டு உள்ளன. “இரண்டாம் கட்ட பொதுமுடங்கங்களின் போது எந்த மாநிலங்களில் அதிக அளவில் வைரஸ் பாதிப்பு இருந்ததோ அந்த மாநிலங்களில்தான் அதிக அளவிலான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அதாவது, 40 சதவிகிதம் பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் 70 சதவிகிதம் பேர் தொழிலாளர்கள்தான்” என்று ஐஜிஐடிஆர் தெரிவிக்கிறது.

“இந்த தொழிலாளர்கள் 6 மாதங்கள் வேலையின்றி இருப்பதாக கணக்கில் கொண்டால், அதனால் ஏற்படும் ஊதிய இழப்பு ரூ. 2 லட்சம் கோடி” என்றும், இதன்படி இரண்டாம் கட்ட பொதுமுடக்கத்தின்போது மட்டும் ரூ. 33 ஆயிரத்து 800 கோடியை தொழிலாளர்கள் இழந்துள்ளனர் என்று 2017-18-இல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய அளவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், “கிராம பகுதிகளில் வேலை இழந்தவர்களை விட நகர்ப்பகுதிகளில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்” என்றும் புள்ளிவிவரங்களை அளித்துள்ளது.

Comments are closed.