பாஜக ஆட்சியில் குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்

0

இந்தியா அரசு நாளுக்கு நாள் ஹிட்லரின் சர்வாதிகாரத்தை விட மோசமான நிலையை நோக்கியே நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசை நோக்கி யாரேனும் கேள்வி கேட்டால் உடனே கைது, வழக்கு, விசாரணை, தீர்ப்பு, சிறை என்று அதிவிரைவில் அவர்களின் கணக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதுவும் பத்திரிக்கையாளர் என்றால் சிறப்பு கவனிப்பு தான்.

சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ்ஸில் ஒரு தலித் பெண் தாக்கூர் ஆண்களால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யபட்டதும், பிறகு இறந்த பெண்ணின் உடலை காவல்துறை திருட்டுத்தனமாக எரிக்க முற்பட்டதும் ஒரு பத்திரிக்கையாளரின் துணிச்சல்மிக்க செயலால் தான் வெகுஜன பார்வைக்கு சென்று சேர்ந்தது. அது ஒரு மக்கள் போராட்டத்திற்கு வழிவகை செய்தது. இல்லாவிட்டால் கவனம் பெறாத நூற்றுக்கணக்கான அநீதிகளில் இதுவும் ஒன்றாக ஆகிருக்கும்.

இப்படியாக களத்தில் நின்று செயல்படும் பத்திரிகையாளர்களை சமீபகாலமாக பாஜக அரசும், காவல்துறையும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது. இதே ஹத்ராஸ் சம்பவத்தை பதிவு செய்ய சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் என்வரை பாதி வழியிலே மறித்து உபி காவல்துறை கைது செய்தது.

தடுப்பு காவல் என்ற பெயரில் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட சித்திக் காப்பன் மீது அடுத்தடுத்து மிக கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு தற்போது UAPA சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது உபி அரசு. சித்திக் காப்பன் முதலில் கைது செய்யப்பட்டபோது அவரின் கைது குறித்து அவரின் குடும்பத்தாருக்கோ, நண்பர்களுக்கோ தெரிவிக்கபட்டவில்லை என்பது தான் மிகப்பெரிய அராஜகம்.

சித்திக் காப்பன் கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர். இவர் “அழிமுகம்” என்ற ஊடகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 5 அன்று ஹத்ராஸ் விசயத்தை பற்றி செய்தி சேகரிக்க ஹத்ராஸ் செல்வதாக குறிப்பெழுதிவிட்டு புறப்பட்டார். பிறகு அவருடன் ஆனா தொடர்பு துண்டிக்கபட்ட நிலையில் கேரள பத்திரிக்கையாளர்கள் சங்கம் ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர் மீது பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தன. சித்திக் காப்பான் கேரள யூனியன் ஆஃப் வொர்கிங் ஜார்னலிஸ்ட்-ன் செயலாளராவும் உள்ளார். காப்பனுக்காக சங்கத்தின் வழக்கறிஞர் மேத்திவ்ஸ் வாதாடி வருகிறார்.

சிறையில் அடைக்கப்பட்ட காப்பானை சந்திக்க பல முயற்சிகளை அவரின் வழக்கறிஞர் மேற்கொண்டார். ஆனால் நீதிமன்றத்தில் உபி காவல்துறை முட்டுகட்டை போட்டது. ஒவ்வொருமுறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் இதை ஏன் உபி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் மனுதாரர் மீதே கேள்வி கேட்டது. அக்டோபர் 29 அன்று காப்பான் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதும் கூட காப்பனின் வழக்கறிஞர் மேத்திவ்ஸ் காப்பானை அணுகி பேச முடியவில்லை.

காப்பானின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்காட வழக்கறிஞர் மேத்திவ்ஸ்க்கு காப்பானின் கையெழுத்து தேவைப்பட்டபோது கூட சிறைதுறையும், காவல்துறையும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. இப்படி பல வழிகளில் காப்பனின் சட்ட உரிமைக்கு உபி அரசும், காவல்துறையும், நீதிமன்றமும் தடையாக இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டு 43 நாட்கள் பிறகு தான் வழக்கறிஞர் மேத்திவ்ஸ்க்கு காப்பானிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வழக்கறிஞர் மேத்திவ்ஸ் இன்னமும் காப்பானின் கையெழுத்தை பெறமுடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

இதேபோன்று மேகாலயாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் பாட்ரிசியா முக்கிம் “சில்லாங் டைம்ஸ்” என்ற பத்திரிக்கையில் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய பத்திரிகை துறையில் மிகவும் கவனிக்கப்படுபவர். இவர் பத்திரிகை துறையில் செய்த பணிகளுக்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முக்கிம் ஒரு பத்திரிகையாளர் என்பதை கடந்து அவர் மேகாலயா மாநிலத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் நலனுக்காகவும் செயல்பட்டு வரும் ஒரு சிறந்த சமூக செயற்பாட்டாளர். மலைவாழ் மக்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்களையும் தொடர்ந்து தனது எழுத்தில் வெளிக்கொண்டு வருகிறார்.

இவர் கடந்த ஜூலை மாதம் தனது ஃபேஸ்புக்கில் மலைவாழ் மக்கள் குழுவை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மற்றொரு பிரிவு இளைஞர்கள் இடையே நடந்த ஒரு சண்டையை பற்றி பதிவிட்டார். அதில் மேகாலயாவில் தொடர்ந்து மலைவாழ் மக்கள் மீது நடக்கும் வன்முறைக்கு இதுவரை நீதி கிடைத்தது கிடையாது என்றும், மேகாலயா மாநிலம் தோல்வியுற மாநிலம் என்றும் கடுமையாக விமர்சித்தார். இந்த பதிவிற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. விசாரணைக்காகவும் முக்கிம் அழைக்கபட்டார். இதற்கிடையில் முக்கிம் தனது செயலில் எந்த தவறும் இல்லை என்றும், இதுவரைக்கும் மலைவாழ் மக்கள் மீதான வன்முறை வழக்குகளை காவல்துறை முறையாக விசாரித்தது இல்லை என்றும் கூறி தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தை நாடினார். ஆனால் நீதிமன்றம் முக்கிம் ஃபேஸ்புக் பதிவு இரு பிரிவிடையே இருக்கும் நல்லுறவை கெடுக்கும் விதமாக இருக்கிறது என்று கூறி முக்கிமின் மனுவை கடந்த நவம்பர் 12 அன்று தள்ளுபடி செய்தது. முக்கிம் விசயத்தில் அவர் மலைவாழ் மக்கள் நலனுக்காக செயல்படுகிறார் என்ற காரணமாகவே இந்தளவு சிக்கலில் சிக்க வைக்கப்படுகிறார் என்று கருதப்படுகிறது.

இதை தொடர்ந்து முக்கிம் தனது பிரச்சனையை இந்திய எடிட்டர் கில்ட் சங்கத்தில் முறையிட்டார். ஆனால் எடிட்டர் கில்ட் முக்கிமின் கோரிக்கையை முகம் கொடுத்து கேட்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முக்கிம் சங்கத்தில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதி அனுப்பினார். அந்த கடித்ததில் தனக்கு எடிட்டர் கில்ட் உதவவில்லை என்பதை காட்டிலும் சங்கத்தில் உறுப்பினரே அல்லாத அர்னாப் கோஷ்வாமிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதை மிகவும் கடுமையாக கண்டித்து எழுதியிருந்தார். ஒரு கிரிமினல் குற்ற வழக்கில் கைதாகிய அர்னாபுக்கு குரல் கொடுக்கும் சங்கம் தனது ஆதராவாக இருக்கவில்லை என்று கருத்தை பொதுவெளியில் வெளியிட்டார்.

அர்னாப் கைது செய்யப்பட்டபோது கருத்து சுதந்திரம் குறித்து பேசிய பாஜகவின் அமைச்சர்கள் சித்திக் காப்பன் மற்றும் முக்கிம் விவகாரத்தில் அமைதியாக இருக்கின்றனர். அமைதியாக இருகின்றார்கள் என்பதை விட அவர்கள் இதையே விரும்புகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அர்னாபின் கைதை தேசிய பிரச்சனையாகவும், அவரின் விடுதலையை கொண்டாட்டமாகவும் பாஜக ஆக்கியது. அர்னாப் மீதான நடவடிக்கை ஒரு தற்கொலை வழக்கின் அடிப்படையிலானது என்று தெரிந்தும் பாஜகவின் ஏஜெண்டுகள் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்று கூச்சலிட்டனர். தங்கள் மீது விசுவாசமும், எதிர்கட்சிகள் மீது வெறுப்பையும் உமிழ்ந்து தள்ளும் அர்னாப் போன்ற வளர்ப்பு பத்திரிகையாளர்களைத்தான் இந்த அரசு மெச்சுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் நீதியின் பக்கம் நின்று செயல்படும் பத்திரிகையாளர்களை இனம்கண்டு அவர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும்.

-ஆரூர்.யூசுப்தீன்.

Comments are closed.