பாஜக முன்னால் எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

0

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், அவரது  சகோதரர் மற்றும் நண்பர்கள் 17 வயதுடைய  சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த வழக்கில், குல்தீப் சிங் செங்காருக்கு கடந்த 2019 டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் சிறுமியின் தந்தையை 2018 ஏப்ரல் மாதம் அடித்து கொலை செய்த வழக்கில், குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் மீது தனியாக விசாரணை நடைபெற்று வந்தது.  தற்போது அந்த வழக்கில் நீதிபதி தர்மேஷ் சர்மா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் அதுல் சிங் செங்கார் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகை, தந்தையை இழந்து 3 பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 4  சிறுவர்களை பராமரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள உன்னாவ் சிறுமிக்கே வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு சக்திவாய்ந்த நபருக்கு எதிராகப் போராடியதற்காக, பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாராட்டிய நீதிபதி சர்மா, சிறுமியின் குடும்பத்திற்கு எதிராக காவல்துறை சார்பில் அடுத்தடுத்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை கண்டித்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து, மத்திய புலனாய்வு கழக அதிகாரிகளிடமும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானஇந்த உன்னாவ்  சிறுமி, 2019 ஜூலையில் தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, லாரி ஒன்று மோதியது. இதில் அந்த பெண்ணின் தாயாரும், உறவினரும் பலியாகினர். சிறுமியும் படுகாயம் அடைந்தார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நீண்டநாள் சிகிச்சைக்கு பிறகே உயிர் பிழைத்தார். தற்போதும், சிஆர்பிஎப் பாதுகாப்பில்தான் அந்த சிறுமி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.