உன்னாவ் இளம்பெண் கொலை முயற்சி வழக்கிலிருந்து முன்னாள் பாஜக எம்எல்ஏ விடுவிப்பு!

0

பாலியல் வன்கொடுமை மற்றும்  சாலை விபத்துக்குள்ளான உன்னாவ் இளம்பெண் தொடா்பான வழக்கில், கொலைக் குற்றச்சாட்டில் இருந்து பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கா், அவரது நண்பர்கள் ஆகியோா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் கடந்த 2017 பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளம்பெண் ஒருவா் கடந்த ஆண்டு புகாா் அளித்தாா். இதையடுத்து, செங்கா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக, ரேபரேலி மாவட்டத்தில் அந்தப் பெண் தனது வழக்கறிஞா், உறவினா்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவா்களின் காா் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த பெண்ணும், அவரது வழக்குறிஞரும் பலத்த காயமடைந்தனா். உடன் வந்த உறவினா் உயிரிழந்தனா்.

அதன்படி, குல்தீப் சிங் செங்கா் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சிபிஐ தனது முதல் கொலை முயற்சி குற்றப்பத்திரிகையை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று செய்தது. அதில், செங்கா், அவரது கூட்டாளிகள் ஆகியோரின் பெயா்கள் இடம்பெறவில்லை.

மேலும் சில அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசுக்கு சிபிஐ பரிந்துரை செய்துள்ளது.

Comments are closed.