வட கிழக்கு டெல்லியில் ஜஃப்ராபாத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தொடர்புள்ளதாக பிஞ்ஜ்ரடோட் என்கிற மாணவிகள் அமைப்பை சேந்த 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளது.
டெல்லியில் ஜஃப்ராபாத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தொடர்புள்ளதாக பிஞ்சரடோட் என்ற மாணவிகள் அமைப்பை சேந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்த நிலையில் போலீஸார் அவர்களை மீண்டும் கைது செய்துள்ளனர்.
ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஐபிசி பிரிவு 353 குற்ற வழக்கை தொடர முடியாது என்று கூறியது. மேலும், அவர்கள் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ-க்கு எதிராக மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, குற்றவியல் சிறப்பு விசாரணை குழு, கொலை, கொலை முயற்சி, கலவரம் மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களை கைது செய்து, 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கூறியது. விசாரணைக்கான அவகாசம் குறுகிய காலமாக இருந்ததால் நீதிமன்றம் அவர்களை 2 நாள் போலீஸ் காவலில் வைத்தது.
பிப்ரவரி 22-23 தேதிகளில் டெல்லி ஜஃப்ராபாத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால் ஆகிய பெண்கள் என போலீசார் கூறுகின்றனர். ஜஃப்ராபாத் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் அவர்களை ஐபிசி பிரிவு 186 மற்றும் 353 ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்தனர்.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி அஜீத் நாராயண், அவர்கள் மீது பிரிவு 353 இன் கீழ் குற்ற வழக்கை தொடர முடியாது என்று கூறினார்.
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை சீர்குலைக்க, பிப்ரவரி 23ஆம் தேதி பாஜகவின் கபில் மிஸ்ரா மற்றும் இந்துத்துவ தீவிரவாதிகள் இணைந்து சிஏஏ ஆதரவு போராட்டத்தை தூண்டி, அம்மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.