டாக்டர் கஃபீல் கானை சிறையில் கொல்ல சதி: நீதிபதிக்கு கடிதம் கஃபீல் கான் மனைவி

0

உ.பி. கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின்போது, தன் சொந்த செலவில் ஆக்சிஜன் எரிவாயு வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரை காப்பாற்றியவர் டாக்டர் கஃபீல் கான். இதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தது உ.பி பாஜக அரசு.

பின்னர் பல சட்ட போராட்டங்களுக்குப்பின், கஃபீல் கான் விடுதலையானார். விடுதலையானதில் இருந்து தற்போது வரை மத்திய பாஜக அரசின் அபாயகரமான திட்டங்களை எதிர்த்து வருகிறார்.

தற்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, உ.பி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில், மருத்துவர் கஃபீல் கான் கலந்துக்கொண்டு வன்முறை தூண்டும் விதமான வார்த்தைகளில் பேசியதாக பொய் கூறி 40 நாட்கள் கழித்து மும்பையில் நடைபெறும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோது கஃபீல் கான்-ஐ உ.பி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உ.பியின் பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறையில் அவரை கொலை செய்ய வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவலை அவரது மனைவி  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கஃபீல் கானுக்கு ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள். கஃபீல் கானுக்கு ஜாமின் வழங்கினார்கள். ஆனால் மதுரா காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி விடுவிக்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து கஃபீல் கானின் மனைவி கூறுகையில், “மதுரா சிறையில் இருக்கும் எனது கணவரை சந்தித்து பேசினேன். அப்போது சிறையில் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்தது. அவருக்கு மனரீதியாக கடும் சித்திரவதை கொடுக்கப்படுகிறது. சிறைக்கு அழைத்து சென்று அவருக்கு உணவளிக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். சிறையிலேயே அவரை கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் என் கணவரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்குக் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.