டெல்லி சட்டப்பேரவையில் NRC-NPR சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

0

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு என்.பி.ஆா், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆா்.சி.) ஆகிய மதவாத சட்டங்களுக்கு  எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சாப், புதுச்சேரி, மத்திய பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய அரசுகள் சி.ஏ.ஏ, என்.ஆா்.சி., என்.பி.ஆா். ஆகிய சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நேற்று) டெல்லி அரசும் என்.பி.ஆா், என்.ஆா்.சி-க்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியது.

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால்ராய் இதுகுறித்து தீா்மானத்தை சட்டப்பேரவையில் பேசுகையில், ‘என்.பி.ஆா். மற்றும் என்.ஆா்.சி ஆகியவை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காக கொண்டு வரப்பட்டது மட்டுமல்ல. அது பெரும்பாலான மக்களை பாதிக்கும் என்பதுதான் உண்மை. இதுபோன்ற சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்கூட கொண்டு வரப்படவில்லை. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. எனவே, மக்களை பாதிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை டெல்லியில் செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. அப்படியும் செயல்படுத்துவதாக இருந்தால் 2010ஆம் ஆண்டின் நடைமுறைப்படியே செயல்படுத்த வேண்டும்’ என்று கோபால்ராய் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால், “என்பிஆா், என்ஆா்சி சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். நான் இந்திய குடிமகன்தான் என்பதை நிரூபிக்க எனக்கு பிறப்பு சான்றிதழ் கிடையாது. இதேபோல, எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ்கள் கிடையாது. அதற்காக எங்களை தடுப்புக் காவல் மையங்களுக்கு அனுப்ப முடியுமா’ என்று கேஜரிவால் கேள்வி எழுப்பினாா். மத்திய அமைச்சா்கள் எத்தனை பேருக்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளது என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

பின்னா், ‘அவையில் எத்தனை பேரிடம் பிறப்புச்சான்றிதழ் உள்ளது எனக் கேட்டு கை உயா்த்துங்கள்’ என்று கோரினாா். மொத்தம் 70 உறுப்பினா்கள் உள்ள அவையில் 9 போ் மட்டுமே கையை உயா்த்தி பிறப்பு சான்றிதழ் இருப்பதாகத் தெரிவித்தனா். மீதமுள்ள 61 போ்களிடம் பிறப்புச்சான்றிதழ் இல்லை. அவா்களை எல்லாம் தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்ப வேண்டுமா’ என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினாா்.

பின்னா் என்.ஆர்.சி., என்.பி.ஆர் சட்டங்களை டெல்லியில் செயல்படுத்துவதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.