டெல்லி ஷாஹின் பாகில் போக்குவரத்து பாதிப்பிற்கு காவல்துறையே காரணம்

0

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு வகையாக டெல்லி ஷாஹின் பாகில் தொடர் போராட்டமாக நடைபெறுகிறது. இரவு நேரங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஷாகின் பாக் பாணியிலேயே தமிழகத்தில் பல இடங்களில் தொடர் போராட்டமாக மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஷாஹின் பாகில் தொடர் போராட்டம் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து அதிகளவில் பாதிப்படைந்துள்ளதாக பாஜக மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஷாஹில் பாக் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ‘‘அமைதியாகவும், சட்டத்திற்கு உள்பட்டு போராட்டத்தில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், சாலையை மறித்து, போராட்டத்தில் ஈடுபடுவது குழப்பமான சூழலுக்கு வழிவகுக்கும்’ என்று தெரிவித்தது.

இந்த வழக்கில் சமூக ஆா்வலா்கள் வஜாஹத் ஹபிபுல்லா, சையது பகதூா் அப்பாஸ் நக்வி, பீம் ஆா்மி அமைப்பின் தலைவா் சந்திர சேகா் ஆஸாத் ஆகியோா், உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளனா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஷாஹின் பாகில் நடைபெற்று வரும் போராட்டம், அமைதிவழி போராட்டத்திற்கு உதாரணமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் முயற்சிகளும், அந்த சமூகத்தினா் மீதான காவல்துறையினரின் அடக்குமுறைகள் கண்டிக்கப்படாமல் உள்ளதும் வருத்தமளிக்கிறது.

ஷாஹின் பாகில் போராட்டத்தை, வன்முறை களம் போல் சித்தரிக்க ஆட்சியில் இருப்பவர்கள் முயற்சிக்கின்றனா். இப்போராட்டத்திற்கு தொடா்பில்லாத சாலைகளில் காவல்துறையினா் தடுப்புகளை அமைத்துள்ளனா். இதனால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனா் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.