உ.பி. மாநிலம் ஆதம்பூரில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில், அம்மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் பங்கேற்று கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது:
முதற்கட்ட கொரோனா தடுப்பூசி மருந்து, லக்னோவிற்கு வந்து சேர்ந்துள்ளது. இதனை ஆதித்யநாத் அரசு, ஏழைகளுக்கு எப்போது வழங்க உள்ளார்? இலவசமாக தரப்படுமா, அல்லது அதற்கும் பணம் வசூலிப்படுமா? என்று தெரியவில்லை.கோவிட் ஊரடங்கு காலத்திலேயே பல்வேறு மாநிலங்களில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர மாநில அரசு எதுவும் செய்யவில்லை. மாநிலத்தில் 90 ஆயிரம் பேருந்துகள் இருந்தன. ஆனால், குஜராத், மகாராஷ்டிரா போன்ற இடங்களிலிருந்து உ.பியைச் சேர்ந்தவர்கள் சைக்கிள் மற்றும் கால்நடை யாகவே வந்தனர்.
அதேபோல நான் முதல்வராக இருந்தபோது, எனது அரசு ஒரு சாதி அரசாங்கம் என்று பாஜக-வினர் விமர்சித்தார்கள். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முக்கியப் பதவிகளில் சொந்த சாதியைச் சேர்ந்தவர்களை அதிகாரிகளாக நியமிப்பதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால், இன்று உண்மையிலேயே தனது சாதி அதிகாரிகளாகப் பார்த்து உயர் பதவிகளில் அமர்த்திக்கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசின் உயர் பதவிகளில் யார் அமர வேண்டுமென்பதை யார் முடிவு செய்கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.