இந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ

0

கொரோனா தொற்றுப பரவல் காரணமாக கல்வித்துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டத்தில் குறைக்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது.

அதன் காரணமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் படிப்புகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11ம் வகுப்பில் உள்ள அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை போன்ற பாடப் பகுதிகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு அரசியல் அறிவியலில் இருந்து உலகின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள், இந்திய பொருளாதார வளர்ச்சியின் தன்மை மாற்றம் போன்ற பாடப் பகுதிகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
10ம் வகுப்பில் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம், பாலினம் மற்றும் ஜனநாயகத்திற்கு சவால்கள் பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டன.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடத் திட்டம் குறைப்பு எனும் பெயரில் பா.ஜ.க. அரசு திட்டமிட்டு மேற்கண்ட பாடங்களை நீக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கொரோனா பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மத்திய பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. தங்களது சொந்த விருப்பங்களைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றிருக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே இந்துத்துவ சனாதன சக்திகள் கோரி வருகின்றன.

கடந்த 2014 இல் அதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தற்போது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே கல்வி என்கின்ற சனாதன சித்தாந்தத்தைச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு தீவிரமாக இருக்கிறது.

பாடத்திட்டத்தில்கூட ‘மதச் சார்பின்மை’ என்ற வார்த்தையே இடம் பெறக் கூடாது என்ற பாசிச சிந்தனை பா.ஜ.க. அரசுக்கு வந்திருக்கிறது.

கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, சி.பி.எஸ்.இ. பாடங்களை குறைக்க வேண்டுமேயொழிய, பா.ஜ.க. அரசு கல்வித் துறையில் இந்துத்துவ கோட்பாடுகளைப் புகுத்தக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.