என்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி

0

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் மிரட்டி அதிகாரங்களை அபகரிக்க முயற்சி செய்வதாக மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கார் மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா நோய்க்கு எதிராக மேற்குவங்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மம்தா அளித்த பதிலையடுத்து, கடந்த வாரம் ஆளுநர் தன்கார் இரண்டு கடிதங்களை முதல்வருக்கு எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்து முதல்வவர் மம்தா, ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

‘ஆளுநரான தங்களது கடிதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இதுவரை எந்த ஒரு ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மீது பயன்படுத்தாத வார்த்தைகளாகும். அந்த கடிதத்தின் உள்ளடக்கம், அதன் தொனி ஆகியவை இந்திய அரசமைப்பு அதிகாரத்திலும், அரசியல் வரலாற்றிலும் இல்லாத விஷயங்களாகும். என் மீதும், எனது அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவும் நீங்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அனைத்தும் ‘மிரட்டல்’ போன்று இருந்தது.

தற்போதைய நெருக்கடியான சூழலில் அதிகாரங்களை அபகரிப்பதற்கான உங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

சமூக ஊடகங்களில் நீங்கள் வெளியிடும் தொடர்ச்சியான சுட்டுரைகளிலும், அரசு சார்ந்த தகவல்களிலும் அரசு முத்திரைகளையும், சின்னங்களையும் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.