நியுரோவின் வாரிசுகள்

0

நியுரோவின் வாரிசுகள்

முஹம்மது ஷேக் அன்சாரி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தூர்தர்ஷன் தொலைகாட்சியில்ராமாயணம் புராண தொடரைபார்ப்பது போல் ஒரு படத்தை ட்விட்டரில் பதிவிட்டுநான் ராமாயணம் பார்க்க துவங்கிவிட்டேன் நீங்களும் துவங்கிவிட்டீர்களா?’ என்று பதிவிட்டிருந்தார். மக்களின் கடும் விமர்சனத்திற்கு பின் அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பால் பல இழப்புகளை சந்தித்து வருகின்றது. இந்த வைரசை கட்டுப்படுத்த அனைத்து அரசுளும், சுகாதார அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுவரை உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9,38,452, அதில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 47,290. இதைவிட அதிக பாதிப்புகள் இருக்கும் என்று கருதப்படும் நிலையில் உலகமே கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றது. இத்தாலிய பிரதமர்எங்களால் எதுவும் செய்யமுடியவில்லைஎன்று கையை விரித்து கதறி அழுதேவிட்டார். அமெரிக்கா தற்போது கடும்  மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதனை செய்திகள் உணர்த்துகின்றன. இந்த பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு போர்க்கால அடிப்படையில் வேலைகள் செய்யவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

மாச்சரியங்களையும், கருத்து வேறுபாடுகளையும் மறந்து பொது நோக்கோடு இத்தகைய கொடூர உயிர் கொல்லி கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அனைத்து தரப்பினரும் முன் வைத்து வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட், தனது அறிக்கையில் தெளிவாக அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்பட தங்களின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இந்த இக்கட்டான சூழலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் கூட சங்கபரிவார கூட்டம் மட்டும் அவர்களின் இதிகாச கதைகளையும், கொள்கைகளையும் எவ்வாறு மக்களுக்கு மத்தியில் பரப்புவது என்பது குறித்தும், எவ்வாறு வெறுப்பு பிரச்சாரங்களை செயல்படுத்துவது என்பது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். என்ன சாதித்துவிட்டதாக அமைச்சர் தொலைக்காட்சியில் தொடர் பார்த்துக் கொண்டிருப்பதாக புகைப்படம் பதிவிடுகிறார்? ஏன் ஒரு அமைச்சராக இருந்தால் தொடர் பார்க்கக் கூடாதா என்ற உங்களின் கேள்வி நியாயமானது தான். இங்கு அது மட்டும் பிரச்சனையில்லை. அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவிடும் அதே வேளையில், வீதிகளில் நடந்து சரியான உணவின்றி, தங்கும் வசதியின்றி, கையிலுள்ள பணமெல்லாம் தீர்ந்து போன நிலையில் சொந்த மாநிலத்தை, சொந்த கிராமத்தை நோக்கி செல்லும் மக்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்காக போதுமான நடடிக்கை எடுக்கவே நேரம் போதாது. மக்கள் பிரதிநிதிகள் வீட்டுக்குள் முடங்கிவிட்டால் எவ்வாறு மக்களை காப்பாற்ற போகிறார்கள்? மோடி ஊரடங்கை அறிவிக்கும் போதுமகாபாரத போர் 18 நாள் நீடித்தது போல் கொரோனாவுக்கு எதிரான ஒட்டு மொத்த நாடும் மேற்கொள்ளும் போர் 21 நாட்கள் நீடிக்கும்என்று கூறினார். அந்த போரில் பங்காற்ற வேண்டிய மத்திய அமைச்சர் மகாபாரத தொடரை பார்த்துக் கொண்டிருப்பது வேடிக்கையானது. ஊரே பற்றி எரியும் போது நீங்கள் பிடில் வாசிப்பது சரியா என்பதுதான் மக்களின் கேள்வி.

இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள தற்போது இருக்கும் ஒரே வழி சமூக விலகல், தனித்திருத்தல் மட்டுமே என்ற நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களின் பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. அத்தியாவிசய தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தவிர அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்து அனைத்து மாநில எல்லைகளும் மூடபட்டுவிட்டன. வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. இது கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள். அதே சமயம், தங்களின் நாட்டு சூழல், மக்களின் நிலை போன்றவைகளை அறிந்து கொண்டுதான் இத்தகைய அறிவிப்பை அரசு மேற்கொண்டதா என்ற கேள்வி மிக முக்கியமானது.

மோடி அரசு சரியாக திட்டமிடாமல் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை கணக்கிட்டால் கொரோனாவல் ஏற்படும் பாதிப்பை விட அதிகமாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த கணக்கின்படி இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் 4.14 கோடி பேர். இவர்களை பற்றி எந்த திட்டமோ அல்லது அவர்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்தனையோ இருந்திருந்தால் அவர்களுக்கான முன்னேற்பாடுகளை செய்து அவர்களின் சொந்த ஊருக்கும் அனுப்ப ஏற்பாடு செய்திருக்கும். உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, வெறும் 22.88 லட்சம் பேருக்கும் மட்டும் தான் (புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு) தங்குவதற்கு ஏற்பாடு செய்தததாக கூறியிருக்கின்றார். மற்றவர்களின் நிலை என்ன? இவர்கள் எங்கு தங்குவார்கள், உணவு மற்றும் இன்னபிற தேவைகளுக்கு யாரிடம் கை ஏந்துவார்கள்? இதனால் தான் பல லட்சம் மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்த ஒரு வாரம் கழிந்த பிறகும் கூட பேருந்து நிலையங்களில் குவிந்துக் கிடக்கின்றார்கள். இவர்களின் நோய் தடுப்புக்கான சமூக விலகல் முன்னெச்சரிக்கை என்ன ஆவது? இவையனைத்தும் அரசின் அப்பட்டமான தோல்வியை காட்டுகிறது.

நமது நாட்டில் 36.3 சதவிதம் பேர் வறுமை கோட்டின் கீழ் உள்ளார்கள். பட்டினி குறியீட்டில் 102-வது இடத்தில் இந்தியா இருக்கின்றது. இவைகளை பற்றியெல்லாம் யோசிக்காமல் திடீரென 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் பலர் பட்டினியில் வாடுகின்றார்கள். டெல்லியிலிருந்து மத்திய பிரதேசம் வரை சுமார் 250 கி.மீ தொலைவு தூரம் வதைக்கும் வெயிலில் பலர் தங்களின் குடும்பங்களை அழைத்து நடந்தே செல்கின்றார்கள்.  பிகார் மாநிலம் முஷாகர் தொலா கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக செய்தி தெரிவிக்கின்றது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சில சிறுவர்கள் பசியால் புல்லை திண்ணும் கொடூரம் நடந்துள்ளதை காட்சி ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளது. தங்களின் ஊருக்கு செல்லும் வழியில் தற்போதுவரை 17 தொழிலாளர்களும், 4 குழந்தைகளும் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்வாறு இருக்க நாம் என்ன சாதித்துவிட்டோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இராமாயணம் தொடர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நமக்கு ஒன்றும் புரியவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கு சென்றார் என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இவ்வளவு மோசமான விளைவுகளுக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் எடுத்த திட்டமிடாத அவசரமும், முன்னேற்பாடு இல்லாத நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம். இது மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுகிறது. அந்த தோல்வியை மறைக்க தற்போது தப்லீக் ஜமாஅத் அமைப்பு பலிகடாவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மீது ஏற்படும் கோபத்திலிருந்து திசை திருப்ப இந்துத்துவ சங்கபரிவாரிகள் சமூக வலைதளங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருவது தெளிவாகவே தெரிகின்றது.

தப்லீக ஜமாஅத் அமைப்பு ஏற்கனவே மார்ச் 22 முதல் 24 வரை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டது. 23ம் தேதி ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வந்த நிலையில் உடனே நிகழ்ச்சியை மூடித்து அவைவரும் செல்வதற்கான அறிவிப்பை தப்லீக் தலைமை கொடுத்தது. வாய்ப்புள்ளவர்கள் விமானம் மூலம் திரும்பினர். அரசு, இரயில் சேவை மற்றும் வாகன சேவையை நிறுத்திய நிலையில் எஞ்சியிருந்தவர்களால் எங்கும் செல்ல முடியாத சூழலில் தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டனர். தப்லீக் தலைமையகம் வாகன ஏற்பாடு செய்து அரசிடமும், அதிகாரிகளிடமும் தொடர்ந்து அதற்கான அனுமதி கோரியிருந்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது அரசு மற்றும் அதிகாரிகளின்  தவறு. அரசின் தவறையும், அலட்சிய போக்கையும் மறைத்து தற்போது அதன் தலைவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை பாஜக ஆட்சி செய்யும் .பி. மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் நடத்தினாரே அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பிப்ரவரி 21ம் தேதி கோவையில் ஈஷா யோகா மையம் சிவராத்திரி நிகழ்ச்சி நடத்தியது. அதில் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள் பங்கெடுத்தனர். அவர்களை விமர்ச்சிக்க துணிவு இல்லாமல் மவுனம் காக்கும் நடுநிலையாளர்கள் எங்கு சென்றார்கள்?

நோய் தொற்று ஒருவருக்கு வந்திருக்கிறது என்று செய்திகளை போடுவதற்கும் இவர்களால் தான் நோய் தொற்று அதிகம் பரவுகிறது என்பதற்கும் மிகப் பெரும் வேறுபாடு இருக்கின்றது. நோய் தொற்றுள்ளவர்கள் மீது பரிதாபம் வரும், நோய் தொற்று இவர்களால் தான் பரவுகிறது என்று கூறும்போது அவரை வெறுக்க தோன்றும். இந்த புரிதலோடுதான் பாசிசவாதிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றார்கள். இவர்களின் குரலாகவே பொறுப்போடு செயல்பட வேண்டிய ஊடகமும், அரசும் செயல்படுவது மனித நேயம் செத்துவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுக்காக கொரோனாவை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இந்தியாவில் மட்டும்தான் கொரோனாவை ஒழிப்பதற்கு பதில் முஸ்லிம்களை குறிவைக்கின்றனர் சிலர். இந்த சிலர் இந்தியாவிற்கு ஆபத்தானவர்கள் இவர்களை அடையாளம் காண்பது அவசியம்.   

(கட்டுரையாளர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர்)

Comments are closed.